தெஹிவளை நெதிமால மைதானத்திற்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 05 நாட்களுக்குள் தெஹிவளை மற்றும் சன நடமாட்டம் மிக்க பகுதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகங்களில் ஐவர் பலியாகியுள்ளனர். தெஹிவளை கடவத்த வீதியில் இன்று காலை 8 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அனுர கொஸ்தா எனும் 45 வயதான ஒருவர் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. Read more
ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 09 அரச அதிகாரிகளுக்கு தேர்தல் கடமைகளில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சிகளை ஊக்குவித்து தேர்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாடுகள் கிடைத்தமையே இதற்குக் காரணம். அவர்களில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களும் அடங்குவதாக ஹம்பாந்தோட்டை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எம்.பி சுமணசேகர தெரிவித்துள்ளார்.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாப்பத்திரத்தின் சில வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாக கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணைகள் நிறைவடையும் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மாணவர்களுக்கு நிதி சார் உதவியை வழங்குவதற்கான புலமைப்பரிசில் பரீட்சை தற்போது போட்டிமிக்க பரீட்சையாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.
சர்வதேச இறையாண்மை பத்திரங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முடிவு மக்களின் அடிப்படை மனித உரிமையை மீறுவதாகத் தீர்ப்பளிக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவினால் இந்த மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த மனுவில் நிதியமைச்சர் நிதியமைச்சின் செயலாளர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.