நாட்டை கட்டியெழுப்பி பொருளாதாரத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதில் தனக்கும், தற்போதைய அரசாங்கத்துக்கும் எந்தவொரு தரப்பினருடனும் விசேடமான தொடர்புகள் இல்லை என்பதால் அதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எவ்வித தயக்கமும் இன்றி எடுப்பதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியளித்தார். இலங்கை வங்கிச் சங்கத்தின் பிரதிநிதிகளை இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் வங்கிகளின் வகிபாகம் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையில் டிஜிட்டல் மயமாக்கலின் முக்கியத்துவம் மற்றும் டிஜிட்டல் அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன், ஒன்றரை வருடங்களில் அந்த பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.