jaffna courtsயாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபருக்கு யாழ் மேல் நீதிமன்றம் இன்று மூன்று மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் இந்த தீர்ப்பை இன்று வழங்கியுள்ளார். யாழ்ப்பாணம் – அச்சுவேலி – கதிரிப்பாய் பகுதியில் 2014ஆம் ஆண்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பொன்னம்பலம் தனன்ஜயன் என்பவரே குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டிருந்தார். குறித்த சம்பவத்தில் மூவரும் உயிரிழப்பதற்கு தானே காரணம் என பொன்னம்பலம் தனன்ஜயன் நேற்றைய தினம் நீதிபதி முன்னிலையில் ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.

தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலோ இந்த கொலைக்கான காரணம் எனவும் அவர் நீதிமன்றில் குறிப்பிட்டிருந்தாகவும் கூறப்பட்டது. இதன்படி, குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட நபர் மூவரை கொலை செய்துள்ளமையினால் மூன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளது.

அத்துடன், 14 வருட கடூழிய சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 ஆயிரம் ரூபா தண்டப் பணம் செலுத்தப்பட வேண்டும் எனவும், அவ்வாறு தண்டப் பணத்தை செலுத்த தவறும் பட்சத்தில் குற்றவாளி மேலும் ஒரு வருட சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட பொன்னம்பலம் தனன்ஜயன் இரண்டு லட்சம் நட்டம் ஈட்டை வழங்க வேண்டும் எனவும், அவ்வாறு நட்டஈட்டை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் இரண்டு வருட கடூழிய சிறைத் தண்டனை அனுப்பவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.