mohamed nasheedஇலங்கையில் தஞ்சம் புகுந்துள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீதை நாட்டுக்குத் திருப்பியனுப்ப இலங்கையிடம் உதவி கேட்கும் முயற்சியில் அந்நாட்டு அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.

இது பற்றித் தெரிவித்த இலங்கைக்கான மாலைதீவு தூதர் மொஹமட் ஹ_செய்ன் ஷரீப், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நஷீத், மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கப்பட்டபோது இலங்கையில் தஞ்சம் புகுந்ததாகத் தெரிவித்தார். முன்னதாக, மொஹமட் நஷீதை இலங்கைக்கான மாலைதீவு தூதர் சட்டத்துக்கு முரணான வகையில் இலங்கையில் தடுத்து வைக்க முயற்சிப்பதாகவும், பலவந்தமாக அவரை மாலைதீவுக்குத் திருப்பியனுப்ப முயற்சிப்பதாகவும் நஷீதின் சார்பாக சர்வதேச சட்ட ஆலோசகர்கள் தெரிவித்திருந்தனர். இதுபற்றித் தெரிவித்த சிரேஷ்ட சட்ட ஆலோசகர் அமல் க்ளூனி, நஷீதைத் தடுத்துவைக்க மாலைதீவு தூதர் முயற்சிக்கும் பட்சத்தில் அது இலங்கையின் இறையாண்மையை மீறும் செயலாகவும், தண்டனைக்குரிய குற்றமாகவும் அமையும் என்று தெரிவித்தார். “விசாரணை என்ற பெயரில் நஷீத் பழிவாங்கப்பட்டுள்ளார்.

எனவே, அவர் தண்டனை அனுபவிக்கத் தேவையில்லை. அவர் மாலைதீவுக்குத் திருப்பியனுப்பப்படக் கூடாது. அதற்கான எந்தவொரு முயற்சியையும் இலங்கை எடுக்கக் கூடாது. அவருக்குரிய மரியாதைகளுடன் அவரது உரிமைகளை வழங்க இலங்கை உறுதியளிக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மோமூன் அப்துல் கையூமின் முப்பது வருட ஆட்சி, 2008ஆம் ஆண்டு மொஹமட் நஷீத் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன் முடிவுக்கு வந்தது. எனினும், 2012ஆம் ஆண்டு நஷீதுக்கு எதிராகக் கிளம்பிய ஊழல் குற்றச்சாட்டுக்களையடுத்து அவர் பதவி விலகினார். எனினும், அவரது பதவிக் காலத்தில் நீதிபதியொருவரைக் கடத்த முயற்சித்ததாகக் கூறித் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட அவருக்கு பதின்மூன்று வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இதேவேளை மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொகமட் நஷீட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி, இலங்கையிடம் மனித உரிமைகள் தொடர்பான சட்டதரணி அமால் க்லோனி வேண்டுகோள் விடுத்துள்ளார். மொஹமட் நஷீட் இலங்கையில் கால்பதிப்பாரானால் அவர் கைதுசெய்யப்படுவார் என இலங்கையிலுள்ள மாலைத்தீவிற்கான தூதுவர் மொஹமட் ஹ_சைன் ஷரீப் இலங்கையின் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்திருந்தார்.

அவரது கைது குறித்து மாலைத்தீவு தமக்கு அறிவித்தால் மொஹமட் நஷீட்டை கைதுசெய்ய தாம் வீதியில் இறங்கி நடவடிக்கை எடுப்பதாகவும் மாலைத்தீவிற்கான தூதுவர் குறிப்பிட்டிருந்தார்.

ஐம்பது வயதான நஷீட் மாலைத்தீவில் ஜனநாயக முறைப்படி தெரிவான முதலாவது ஜனாதிபதி என்பதுடன், நான்கு வருடம் கடமையாற்றினார். எவ்வாறாயினும், 2015ஆம் ஆண்டு பயங்கரவாத சட்டத்தின்கீழ் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட்டார். சிறைப்படுத்தப்பட்ட அவர், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மாலைத்தீவில் இருந்து லண்டனுக்கு சிறை விடுதலையில் சென்றிருந்தார். மருத்துவ சிகிச்சையின் பின்னர் அவர், பிரித்தானியாவில் அகதி அந்தஸ்த்தை கோரியிருந்தார்.

அகதி அந்தஸ்த்து விண்ணப்பத்தினை நிராகரித்து, மாலைத்தீவு அரசாங்கம் அவரை மாலைத்தீவிற்கு மீள வரவழைக்க மேற்கொண்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை. இதேவேளை, மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட்டிற்கு எதிராக மாலைத்தீவு மேற்கொண்ட விசாரணை மற்றும் வழங்கப்பட்ட தண்டனை குறித்து ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல மனித உரிமை அமைப்புக்கள் விமர்சனங்களை வெளியிட்டிருந்தன.