battiமட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பாலமீன்மடு பகுதியில் மட்டக்களப்பு மாநகர சபையினால் குப்பைகளை புதைப்பதற்கு மேற்கொண்ட நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகள் திருப்பெருந்துறையில் உள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டப்பட்டுவந்த நிலையில், தீ பரவியதையடுத்து அங்கு கழிவுகள் கொட்டுவதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.இதன்போது நீதவான் நீதிமன்றிலும் குறித்த பகுதி மக்களினால் வழக்கு தொடரப்பட்டு எதிர்வரும் 28ம் திகதி வரை குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்தில் குப்பைகள் கொட்டுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் கடந்த 17 நாட்களுக்கும் மேலாக மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகள் அகற்றப்படாத காரணத்தினால் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் வீதிகளிலும் வாவிக்கரையோரங்களிலும் குப்பைகளை பொதுமக்கள் வீசிச்செல்லும் நிலையேற்பட்டுள்ளது.

இதன்காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் பெரும் சுகாதார பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதுடன், குப்பைகளையும் கழிவுகளையும் அகற்றுவதில் மட்டக்களப்பு மாநகரசபை திணறிவருகின்றது.

மாற்று இடத்தில் குப்பைகளை கொட்டி முகாமை செய்வதற்கு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் கடுமையான பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில், சரியான இடம் கிடைக்காத காரணத்தினால் கழிவுகளை அகற்ற முடியாத நிலையேற்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் பாலமீன்மடு பகுதியில் உள்ள அரச காணியில் கழிவுகளை கொட்டி அதனை மூடிவிடும் செயற்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் மட்டக்களப்பு மாநகரசபை மேற்கொள்ள எடுத்த நடவடிக்கைக்கு இன்று பகல் அப்பகுதி மக்கள் கடுமையான எதிர்ப்பினை தெரிவித்தனர்.

இனந்தெரியாத நபர்கள் அப்பகுதியில் தொடர்ச்சியாக குப்பைகளை வீசிச் செல்வதாகவும் இதனால் தாங்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் சுகாதார சீர்கேடுகளுக்கு ஆளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மட்டக்களப்பு மாநகரசபை அப்பகுதியில் குப்பைகளை புதைத்துவிட்டுச் சென்றால் ஏனைய பொதுமக்களும் அப்பகுதிக்கு குப்பைகளை கொண்டுவந்து கொட்டும் நிலையேற்படும் என தெரிவித்த மக்கள், இயற்கை வனப்பு மிக்க இப்பகுதியை குப்பை மேடாக மாற்றுவதற்கு அனுமதிக்கமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.

இதன்போது மட்டக்களப்பு பொலிஸாரும் வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் பொதுமக்களின் எதிர்ப்பு காரணமாக குப்பைகள் புதைக்கும் செயற்பாடுகளை மாநகரசபை இடைநிறுத்திக்கொண்டது.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமை எதிர்காலத்தில் பாரிய சுகாதார பிரச்சினையை தோற்றுவிக்கும் சாத்தியமுள்ளதாக சுகாதார பிரிவினர் எச்சரித்துள்ளனர்.