ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதியை இம்மாத இறுதிக்குள் அறிவிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல் ரத்நாயக்க இன்று(16) உத்தியோகப்பூர்வமாக தெரிவித்தார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டார். ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதியை அறிவிப்பதற்கான அதிகாரம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இன்று நள்ளிரவுக்குப் பின்னர் கிடைக்கவுள்ள நிலையில் இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு தொடர்பில் வௌியிடப்படும் பல்வேறு வதந்திகள், கருத்துகள் போன்றவற்றை தௌிவுபடுத்துவதற்காகவே இந்த விசேட ஊடகவியலாளர் சந்திப்பை ஏற்பாடு செய்ததாக தேர்தல்கள் ஆணைகுழுவின் தலைவர் கூறினார்.

1976 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக தேர்தல்கள் திணைக்களத்திலும் பின்னர் ஆணைக்குழுவிலும் கடமையாற்றி கிட்டத்தட்ட 15 முதல் 20 க்கு மேற்பட்ட தேர்தல்களை நடத்தியுள்ள போதிலும் இதுபோன்றதொரு சூழலை தாம் இதற்கு முன்னர் கண்டதில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் இங்கு சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் பிரகாரம் செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 ஆம் திகதிக்கு இடைப்பட்ட ஒருநாளில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற வேண்டுமெனவும் தேர்தலுடன் தொடர்புடைய அனைத்து செயற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தி அதன் அடிப்படையிலேயே தேர்தலுக்கான தினம் அறிவிக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியலமைப்பு மற்றும் ஜனாதிபதித் தேர்தல் சட்டங்களுக்கு அமைய மாத்திரமே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் திகதி தீர்மானிக்கப்படும் எனவும் வேறு எந்தவொரு காரணிகளும் இந்த விடயத்தில் கருத்திற்கொள்ளப்படமாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் வலியுறுத்தினார்.

2024 ஆம் ஆண்டுக்காக பிரதான வாக்காளர் இடாப்பு மற்றும் புதிய வாக்காளர்களின் விபரங்கள் அடங்கிய வாக்காளர் இடாப்பு ஆகியன தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர் இம்முறை 171,400,00 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்காக உரிய அரச நிறுவனங்களுடன் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நியமனங்கள் தமது அறிவுறுத்தல்களுக்கு அமைய இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.