எகிப்திய தலைநகர் கெய்ரோவில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அந்த நாட்டின் வெளிவிகார அமைச்சர் பத்ர் அப்தெலாட்டி ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. கடந்த வருடம் கொழும்பில் இடம்பெற்ற வெளியுறவு அமைச்சர்கள் மட்ட இரண்டாவது சுற்று அரசியல் ஆலோசனை கூட்டத்தின்போதான இருதரப்பு ஒத்துழைப்பு வழிமுறைகளையும் எகிப்திய வெளிவிவகார அமைச்சர் பத்ர் அப்தெலட்டி இதன்போது பாராட்டியுள்ளார்.

கடந்த வருட இறுதியில் எகிப்து மற்றும் இலங்கை நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தை இலங்கை மீண்டும் ஆரம்பித்ததையும் அவர் வரவேற்றுள்ளார்.

இலங்கையின் பிரதான நிறுவனங்களின் ஆயத்த ஆடைத் துறையில் முதலீடுகளைப் பாராட்டிய அவர் இலங்கை முதலீட்டாளர்களை உற்பத்தித் துறையில் அதிக நம்பிக்கைக்குரிய முதலீட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

அதேநேரம் பொருளாதாரம் கலாச்சாரம் மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் எகிப்துடன் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இலங்கையின் அர்ப்பணிப்பையும் ஆர்வத்தையும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.