சம்பூரில் இந்திய நிதி உதவியுடன் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை விரைவாக நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் திறன் 120 மெகாவோட் என எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார். இந்திய எரிசக்தி அதிகார சபை மற்றும் மின்சார சபையின் ஒன்றிணைந்த வேலைத்திட்டமாக இதனை முன்னெடுக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் பின்னர் இந்த திட்டத்திற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்படுமெனவும் பேராசிரியர் உதயங்க ஹேமபால தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியாவுக்கு நாளை உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அவர் மேற்கொள்ளும் முதலாவது வௌிநாட்டு விஜயம் இதுவாகும்.
இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அழைப்பிற்கிணங்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இந்தியா பயணமாகிறார்.
இந்த விஜயத்தின் போது இந்திய குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட ஏனைய உயர்மட்ட இராஜதந்திரிகளை ஜனாதிபதி சந்தித்து இருதரப்பு பரஸ்பர கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார்.
இந்த விஜயமானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை மேலும் முன்னேற்றுவதாகவும் பலப்படுத்துவதாகவும் அமையுமென வௌிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சினால் அறிக்கை வௌியிடப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெறும் இலங்கை – இந்தியாவுக்கிடையிலான முதலீடு மற்றும் வர்த்தக தொடர்பை மேம்படுத்தும் வர்த்தக மாநாட்டிலும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க கலந்துகொள்ளவுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவர் புத்தகயாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கையானது இந்தியாவின் மிகவும் நெருங்கிய கடல்சார் நாடெனவும் பிரதமரின் சாகர் திட்டம் மற்றும் இந்தியாவின் அயல்நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை அடிப்படையில் இலங்கை மிக முக்கிய நாடெனவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.