நடைபெறவிருக்கும் பிரதேச சபை தேர்தலில் தமிழ் தரப்பினர் தமது பலத்தினை காண்பித்து தமிழ் தேசியம் மற்றும் தமிழர்களின் இருப்பிற்கான போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான தேவையும் அவசியமும் உள்ளது. எமது உரிமைகளுக்கான நீண்ட கால போராட்டம் மற்றும் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருந்த போதும், தமிழ் மக்களுக்கான உரிய இறுதி தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை.
சமத்துவமும் தோழமையும் பேசும் தற்போதைய அரசு கூட இலங்கையில் தமிழர்கள் ஒரு தேசிய இனம் என்பதினை சிறிதளவேணும் ஏற்றுக்கொள்ளவில்லை.
எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகளாக இருப்போம் என்றால் அந்த தாய் யார்? ஒரு சிங்கள பௌத்த தாயின் பிள்ளைகள் அல்ல நாங்கள் அப்படி இருக்கவும் நாங்கள் விரும்பவில்லை. ஐயாயிரம் ஆண்டுகள் தொன்மையானவள் எமது தமிழ் தாய்,
அதற்காக நாம் யாரையும் அடக்கி வாழவோ அல்லது மேலாதிக்கம் செலுத்தவோ எத்தனித்ததும் இல்லை. நீங்களும் வாழுங்கள் எங்களையும் எமது உரிமைகளோடு வாழ்வதற்கு ஏதுவாக அதிகாரங்களை பகிர்ந்து கொள்ளுங்கள் என்றே கேட்டு வந்துள்ளோம்.
வட – கிழக்கு வாழும் தமிழ் மக்களே எதிர் வரும் பிரதேச சபை தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகளுக்கு உங்கள் ஆதரவை வழங்குகள். தமிழ் மக்களுக்கான உரிமைகளும் அதிகாரங்களும் வழங்கப்படாத நிலையில் , இந்த தென்பகுதி தலமையிலான கட்சிகளுக்கு நீங்கள் ஆதரவு வழங்குவீர்கள் ஆயின், உங்களையே நீங்கள் அழித்தொழிப்பதற்கு சமனாகும்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு கிடைத்த வெற்றியினை காரணம் காண்பித்து தமக்கு தமிழ் மக்களே ஆணை தந்துள்ளார்கள் என்று இந்தியா சென்ற அமைச்சர் சந்திரசேகரன் கூறியதினை கருத்தில் கொள்ளுங்கள்.
வட-கிழக்கு வாழ் தமிழ் மக்களே!உங்கள் எதிர்காலத்தை நிர்ணையிக்கும் பொறுப்பும் கடமையும் உங்களுக்கே உள்ளது என்பதினை மனதில் கொள்ளுங்கள்.
முதலில் உங்கள் மொழி, இனம் அதன் பின்னரே நாடு. பல்லின மக்கள் வாழும் தேசத்தில் உங்கள் இருப்பே உங்களையும், உங்களின் வருங்கால சந்ததியையும் வாழ வைக்கும்.
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்! வாழிய பாரத மணித்திரு நாடு! இவ்வாறே எட்டயபுரத்தான்(பாரதி) வரிசைப்படுத்தி காண்பித்தான்.
செ.குணபாலன்,
புளொட்- கனடா கிளை சார்பாக,
06. பெப், 2025.