Posted by plotenewseditor on 27 August 2017
Posted in செய்திகள்
Posted by plotenewseditor on 10 February 2017
Posted in செய்திகள்
தமிழ் மக்கள் பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘எழுக தமிழ்’ எழுச்சிப் பேரணி இன்று காலை கல்லடி மணிக்கூட்டுக் கோபுரம் முன்பாக வடமாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
புளொட் தலைவரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன், முன்னாள் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரத்தினம், தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவர் எஸ்.வசந்தராஜா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் இப்பேரணியில் கலந்துகொண்டிருந்தனர். Read more
Posted by plotenewseditor on 23 January 2015
Posted in செய்திகள்
இணுவில் மேற்கு இளைஞர் கழகத்திற்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு-
யாழ்ப்பாணம் இணுவில் மேற்கு இளைஞர் கழகத்திற்கு நேற்று (21.01.2015) புதன்கிழமை புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமாகிய கௌரவ. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் விளையாட்டு உபகரணங்களை வழங்கிவைத்துள்ளார். வட மாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் பிரமாண அடிப்படையிலான நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட ரூபாய் 50ஆயிரம் (50,000) பெறுமதியான விளையாட்டு உபகரணங்களே கையளிக்கப்பட்டுள்ளன. இணுவில் மேற்கு இளைஞர் கழக நிர்வாகிகள் நேற்றையதினம் இவற்றைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
Posted by plotenewseditor on 30 September 2014
Posted in செய்திகள்
ஊவா மாகாண முதலமைச்சராக ஷஷீந்ர ராஜபக்ஸ பதவிப்பிரமாணம்-
ஊவா மாகாண சபையின் முதலமைச்சராக ஷஷீந்ர ராஜபக்ஸ, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். மாகாண சபைக்கு தெரிவாகியுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக ஊவா மாகாண ஆளுநர் நந்த மித்ர குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் பதவிப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றுள்ளது. ஊவா மாகாண சபைக்கு ஏனைய கட்சிகள் சார்பில் தெரிவான உறுப்பினர்கள் எதிர்வரும் சில தினங்களில் பதவிப் பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக மாகாண ஆளுநர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
லண்டன் பி.பி.ஸி தமிழோசையைக் காப்பதற்கு கை கொடுக்குமாறு வேண்டுகோள்-
கடந்த 74 ஆண்டுகாலமாக லண்டனிலிருந்து இயங்கி வரும் தமிழோசையை இந்தியத் தலைநகர் டெல்லிக்கு நாடு கடத்துவதற்கு பி.பி.ஸி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இந்தியா பொலிஸி எனும் திட்டத்தின் கீழ் இந்திய சாகரத்துக்குள் சேர்த்துவிட பி.பி.ஸி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒரு பக்கசார்பற்ற சர்வதேச தமிழ் செய்திநிறுவனம் தமிழோசையாகும். இது இலங்கை அரசியலில் பல்வேறுபட்ட தரப்பினரின் ஆதரவையும், அதே சமயம் விமர்சனத்தையும் தமிழோசை பெறுவதன்மூலம் தெளிவாகின்றது. இலங்கையில் சிறுபான்மையின மக்களுக்கு பி.பி.ஸி தமிழோசை இன்னமும் அவசியமானதாக உள்ளது. இந்நிலையில் தமிழோசையை லண்டனில் இருந்து டெல்லிக்குக் கொண்டு செல்வது தமிழ்பேசும் இலங்கை சிறுபான்மை சமூகங்களுக்கு பேரிழப்பாகும். பி.பி.ஸி சிங்கள சேவை லண்டனில் இருக்க, தமிழோசையை மட்டும் டெல்லிக்கு அனுப்புவது அந்தசேவை அதிகம் தேவைப்படும் மக்களுக்கு பெரும் இழப்பாக அமையும். எனவே இதனைத் தடுப்பதற்காக தயவு செய்து பி.பி.ஸி நிர்வாகத்துக்கும், பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கும் அனுப்புவதற்கான கீழுள்ள விண்ணப்பத்தில் பெயரைப் பதிவு செய்வதுடன் முகநூலிலும் பகிர்ந்துகொள்ளுமாறு கேடடுக்கொள்ளப்பட்டுள்ளது.
http://www.petitions24.com/signatures/save_the_london_bbc_tamil_broadcast/start/0
மேலும் செய்திகளை வாசிக்க…. Read more
Posted by plotenewseditor on 21 February 2014
Posted in செய்திகள்
வவுனியா சைவபிரகாச ஆரம்பப் பாடசாலையின் மெய்வல்லுனர் போட்டி-
வவுனியா சைவபிரகாச ஆரம்ப பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு போட்டி நேற்றுப் பிற்பகல் 2.00 மணியளவில் வெகு விமர்சையாக நடைபெற்றது. பாடசாலையின் அதிபர் திருமதி கி.நந்தபாலன் தலைமையில் பாடசாலையின் கனகரட்ணம் விளையாட்டு மைதானத்தில்; இந்நிகழ்வு இடம்பெற்றது. இவ் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக பிரதிக்கல்வி பணிப்பாளர் (திட்டமிடல்) செல்வி லதாங்கி அம்பிகைபாலன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் திரு எம்.பி.நடராஜ் ஆகியோரும், கௌரவ விருந்தினர்களாக சைவபிரகாச மகளிர் கல்லூரி அதிபர் செல்வி உமா இராசையா, உதவிக் கல்விப்பணிப்பாளர் உடற்கல்வி (ஜனாப் எ.எம்.சுபைர், வவுனியாவின் முன்னாள் உப நகர பிதாவும், புளொட் முக்கியஸ்தரும், கோவில்குளம் இளைஞர் கழக ஸ்தாபகருமாகிய திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்) அவர்களும் பங்கேற்றிருந்தனர்.
Posted by plotenewseditor on 25 December 2013
Posted in செய்திகள்
உலகில் மிகப் பெரிய மிதக்கும் புத்தகசாலை-
உலகில் மிகப் பெரிய மிதக்கும் புத்தகசாலை எனக் கூறப்படும் லோகோஸ் ஹோப் என்ற கப்பல் நாளைமுதல் எதிர்வரும் ஜனவரி 7ஆம் திகதிவரை காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகசாலை 09 மாடிகளை கொண்டதுடன் 132 அடி நீளமானது. இதுவரை 164 நாடுகளில் 1,400 துறைமுகங்களில் இக்கப்பல் நங்கூரமிட்டுள்ளது. கப்பலில் 45 நாடுகளைச் சேர்ந்த 400 தொண்டர் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஜெர்மனியில் பதிவு செய்யப்பட்டுள்ள தொண்டர் அமைப்பின்கீழ் இக்கப்பல் செயற்பட்டு வருகிறது. மேற்படி கப்பலில் 5 ஆயிரம் புத்தகங்களை கொண்ட நூலகம் உள்ளது. இக்கப்பலை பார்வையிட செல்வோரில் 12 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் 100 ரூபாவை கட்டணமாக அறவிடவும் லோகோஸ் ஹோப் கப்பலின் அதிகாரிகள் எதிர்பார்த்துள்ளனர். கிழமை நாட்களில் காலை 10முதல் மாலை 4 மணிவரையும், சனிக்கிழமை காலை 10 முதல் இரவு 8 மணி வரையும், ஞாயிற்றுக் கிழமைகளில் பிற்பகல் 2 மணிமுதல் இரவு 8 மணி வரையும் கப்பலை பார்வையிடலாம்.
இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை-
தென் சூடானில் வலுபெற்றுவரும் மோதல்களால் அங்கிருந்து உகாண்டாவை சென்றடைந்துள்ள 10 இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தொழில் வழங்குனர்களின் செலவில் இவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம கூறியுள்ளார். இவர்களுக்குத் தேவையான வசதிகளை உகண்டாவிலுள்ள இலங்கைத் தூதரகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேச சட்டம்-
சர்வதேச ரீதியாக தீவிரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், புதிய சட்டம் இயற்றுவது கடினமான செயல்திட்டம் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதி நிரந்தர பிரதிநிதி பாலித்த கொஹன தெரிவித்துள்ளார். ஐ.நா பொதுச் சபையின் ஆறாவது குழுவின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பும் அதுவாகும் எனவும், அந்த குழுவினால், தீவிரவாதத்திற்கு எதிராக சர்வதேச சட்டத்தை அமைக்கும் வரைவு ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தீவிரவாதத்திற்கு எதிராக அமைக்கப்படும் சர்வதேச சட்டம் தொடர்பில் உறுப்பு நாடுகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நியூயோக்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் உள்ள சிங்வா செய்திச் சேவையுடன் இடம்பெற்ற பேட்டியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கைப் பொலீசார் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்-
இந்தியாவிலருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்தல் வியாபாரம் குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்விடயம் குறித்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கவனம் செலுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். இதன்படி பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இந்தியாவிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானிலிருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு போதைப் பொருள் வியாபாரம் செய்யும் நபர்கள் மூவர் கடந்த வாரம் சென்னையில் கைதாகியுள்ளனர்.
ஐ.தே.கட்சி எம்.பி தேவாரப்பெரும உள்ளிட்ட இருவர் உண்ணாவிரதம்-
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தேவரப்பெரும மற்றும் வெல்லவாய பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவர் திலீப் பிட்டிகல ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பதுரலிய வைத்தியசாலைக்கு முன்னால் இவர்கள் இன்றுபகல் தொடக்கம் உண்ணாவிரதம் இருந்து வருகிறன்றனர். மூடப்பட்டுள்ள பதுரலிய வைத்தியசாலையை திறக்குமாறு வலியுறுத்தியே மேற்படி உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி வருகின்றனர்.
முல்லைத்தீவு வெடிப்புச் சம்பவத்தில் சிறுவன் படுகாயம்-
முல்லைத்தீவு, தேவிபுரம் பகுதியில் நேற்று மர்மப்பொருள் ஒன்று வெடித்ததில் 6 வயது சிறுவன் படுகாயமடைந்துள்ளார். இவ்விபத்தில், செல்வராசா சுதாகரன் என்ற சிறுவனே படுகாயமடைந்து, முள்ளியவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயிர்ச் செய்கைக்காக நிலத்தை உழுதும்போது, வித்தியாசமான பொருளொன்று வெளியில் தெரிந்துள்ளது. இதன்போது, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் அதனை எடுத்தபோது அது வெடித்துள்ளது. முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகைள மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல்-
கிளிநொச்சி மாவட்டத்தில் சிவில் பாதுகாப்பை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட செயலகத்தில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றுள்ளது. கிராம மட்டங்களில் உள்ள பிரச்சினைகளை இனங்கண்டு அதற்கான தீர்வுகளைப் பெறுதல் தொடர்பாகவும் சிறுகுற்றங்கள் இடம்பெறும் இடங்களில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி அதை தடுப்பது தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியை தீர்க்கும் முகமாக நடமாடும் சேவைகளை நடத்துவது குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இக் கலந்துரையாடலில் கிளிநொச்சி மாவட்ட அரச உயரதிகாரிகள், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.