மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் மூவர் இன்றைய தினம் மன்னார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், வெவ்வேறு சந்தர்ப்பங்களில் உயிரிழந்த சிந்துஜா மற்றும் வேணுஜா ஆகியோரின் மரணத்துக்கு நீதி கோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் பல்கலைக்கழகங்களில் கல்வி இளங்கலைப் பட்டம் பெற்ற ஏராளமானோருக்கு முறையான முறைமை இல்லாமல், அரசாங்கம் ஆசிரியர் நியமனங்களை வழங்கி வருவதாக ஆசிரியர் மற்றும் அதிபர்கள் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.
வவுனியா, ரம்பைக்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டப் பகுதியில் இருந்து துருப்பிடித்த இரண்டு T-56 துப்பாக்கிகளும் 450 தோட்டாக்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். கட்டுமானமொன்றிற்காகத் தோட்டப் பகுதியில் நிலத்தைத் தோண்டிய போது இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. உள்நாட்டு யுத்தத்தின் போது ஏதேனும் ஒரு அமைப்பு, துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களைப் புதைத்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
வாழைச்சேனையின் ஒரு காலத்தில் செயலிழந்த காகிதத் தொழிற்சாலை இப்போது லாபத்தில் இயங்கி வருவதாகவும், அதன் நீண்டகால கடன்களைத் தீர்க்கத் தொடங்கியுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். உற்பத்தி திறனை விரிவுபடுத்த புதிய இயந்திரங்களை இறக்குமதி செய்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.
07.06.1991இல் வவுனியா தாண்டிக்குளத்தில் மரணித்த தோழர் ராஜா (செல்வரட்ணம் கனகசபை – ஒட்டுசுட்டான்) அவர்களின் 34ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று…..
மொனராகலை, தொம்பகஹவெல பகுதியில் உள்ள காட்டுப் பகுதியில் ஒரு குகையில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகிக்கப்படும் 27 வயதான நபர், தன் உயிரை மாய்த்து கொண்டுள்ளார். அவரது சடலம், வெள்ளிக்கிழமை (06) கைப்பற்றப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் பொலிஸ் ஓய்வறையில் T-56 துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு வெள்ளிக்கிழமை (06) காலை தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். இறந்தவர் ஹசலகாவைச் சேர்ந்த ஏ.எம். உபசேன அத்தநாயக்க (57) என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் இரண்டு பிள்ளைகளின் தந்தை ஆவார்.
பிறந்து இரண்டு நாளேயான சிசுவை, ரூ.75,000-க்கு விற்க முயன்றதற்காக, மூன்று குழந்தைகளின் தாயான 46 வயதுடைய தாய்க்கு, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க, ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை வியாழக்கிழமை (05) விதித்தார். குழந்தைகள் மற்றும் மகளிர் பணியக அதிகாரி ஒருவருக்கு அந்த தாய், தனது குழந்தையை விற்க முயன்றுள்ளார்.
அஸ்வெசும கொடுப்பனவை மேலும் 4 இலட்சம் குடும்பங்களுக்கு அடுத்த மாதம் வழங்கவுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றம் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. திட்ட பயனாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கைகள், தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தெரிவித்தார். 420,000 இடைநிலை குடும்பங்களுக்கான அஸ்வெசும கொடுப்பனவு கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
தெமட்டகொடையில் உள்ள சியபத் செவன அடுக்குமாடி குடியிருப்பில் நான்கு முச்சக்கர வண்டிகள் (ஓட்டோக்கள்) முற்றிலுமாக எரிந்து சாம்பலாகிவிட்டதாக தெமட்டகொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை, ஆனால் முச்சக்கர வண்டிகளுக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த வேனும் சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.