ஆசிரியர், அதிபர் இடமாற்றங்களில் பாரபட்சத்திற்கு இடமளிக்க முடியாது என ஆசிரியர், அதிபர் சங்கங்களுக்கு வட மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார். வட மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறை, இடமாற்றங்கள் வழங்கப்படாமை, அதிபர் நியமனங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம், வட மாகாண கடமை நிறைவேற்று அதிபர்கள் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினர்கள், வட மாகாண ஆளுநர் P.S.M.சார்ள்ஸை தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகளை சமர்ப்பித்துள்ளனர். யாழ்ப்பாணத்திலுள்ள வட மாகாண ஆளுநரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்புகள் இடம்பெற்றன.
போட்டிப் பரீட்சையூடாக தெரிவு செய்யப்பட்ட அதிபர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் அவர்கள் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாகவும் இதனால் பல வருடங்களாக பதில் கடமை புரிந்த அதிபர்கள், பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
விடயங்களை கேட்டறிந்த வட மாகாண ஆளுநர், கோரிக்கைகளை பரிசீலிப்பதாகவும், தேவை ஏற்படின் ஜனாதிபதியின் கவனத்திற்கு விடயங்களை கொண்டு செல்வதாகவும் உறுதியளித்துள்ளார்.