Header image alt text

52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்காக மாகாணசபை உறுப்பினர் சித்தார்த்தன் நிதி ஒதுக்கீடு

 koslanda (81)யாழ். குடாநாட்டிலுள்ள பாடசாலைகள், சனசமூக நிலையங்கள், ஆலயங்கள், விளையாட்டுக் கழகங்கள், முன்பள்ளிகள் உட்பட 52 பொது அமைப்புக்களின் வளர்ச்சிக்கு நிதியுதவி வழங்கியுள்ள புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான திரு. தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்திற்கு கைகொடுத்து உதவும் வகையில் சுழற்சிமுறைக் கடன் வழங்குவதற்கும் நிதியுதவி வழங்கியுள்ளார். வட மாகாணசபையின் 2014ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட நிதியிலிருந்து தனக்கு வழங்கப்பட்ட 40 லட்சம் ரூபாவை பரவலாக குடாநாட்டிலுள்ள அரசாங்கப் பாடசாலைகள் உட்பட பொது அமைப்புக்களின் அபிவிருத்திக்காக அவர் வழங்கியுள்ளார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியைக் கருத்திற்கொண்டு ஏழு பாடசாலைகளுக்கு கட்டிடம், கணணி, வாத்தியக்கருவிகள் போன்றவற்றிற்காக 6லட்சத்து 90ஆயிரம் ரூபாவையும், நான்கு ஆலயங்களின் கட்டிடப் புனரமைப்புக்கு 4லட்சம் ரூபாவையும், 19 சனசமூக நிலையங்களுக்கு கட்டிடம், குடிநீர்த் தாங்கி, குழாய்க்கிணறு, தளபாடங்கள் போன்றவற்றிற்கு 13லட்சத்து 25ஆயிரம் ரூபாவையும், ஏழு விளையாட்டுக் கழகங்களின் உபகரணங்கள், மைதானம் திருத்தல் என்பவற்றிற்காக 4லட்சத்து 25ஆயிரம் ரூபாவையும், ஏழு கிராம அபிவிருத்திச் சங்கங்களுக்கு தளபாடம், கட்டிடம் புனரமைப்பு, நீர் இறைக்கும் இயந்திரம், குழாய்க்கிணறு அமைத்தல் ஆகியவற்றிற்காக 5லட்சத்து 50ஆயிரம் ரூபாவையும் மூன்று முன்பள்ளிகளின் அபிவிருத்திக்கு 1லட்சத்து 90ஆயிரம் ரூபாவையும் அவர் வழங்கியுள்ளார். இதேவேளை முதியோர் சங்கத்திற்கு 25ஆயிரம் ரூபாவும், சுகாதார வைத்தியப் பணிமனைக்கு 50ஆயிரம் ரூபாவையும், பிரதேச சபைக்கு 50ஆயிரம் ரூபாவையும், விவசாய சம்மேளனத்திற்கு 75ஆயிரம் ரூபாவையும், சிக்கன கூட்டுறவுச் சங்கத்திற்கு 50ஆயிரம் ரூபாவையும் வழங்கியுள்ள வட மாகாணசபை உறுப்பினர் திரு தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள், வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் சுழற்சிமுறைக் கடன் வழங்குவதற்கு 1 லட்சம் ரூபாவையும் வழங்கியுள்ளார். இதேவேளை மாகாண சபைக்கூடான தனது சம்பளத்தையும் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்திற்காக அவர் தொடர்ந்து வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.