Header image alt text

இலங்கை தொடர்பான ஐ.நா பிரேரணை தொடர்பாக (புளொட்) அமைப்பின் (D.P.L.F ) அரசியற் கட்சியினால் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டு ஏகமனதாக தீர்மானிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை தொடர்பாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) அமைப்பின் அரசியற் கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (D.P.L.F) கட்சியினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் வேண்டுகைக்கு இணங்க, அவரிடம் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரை.

கௌரவ மைத்திரிபால சிறிசேன அவர்கள்,
மாண்புமிகு ஜனாதிபதி,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு.

கடந்த 23.10.2015 அன்று தங்களால் கூட்டப்பட்ட அனைத்துக்கட்சி கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்ட எமது வாய்மூல பரிந்துரைகளை எழுத்தில் சமர்ப்பிக்குமாறு நாம் கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க எமது கட்சியின் எழுத்துமூல பரிந்துரைகளை இத்தால் சமர்ப்பிக்கிறோம்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி ஆகிய எமது கட்சியின் இந்தப் பரிந்துரைகள், எதிர்காலத்தில் தங்களால் முன்னெடுக்கப்படவிருக்கின்ற இன நல்லிணக்க முயற்சிகளுக்குத் தமிழ் மக்களின் ஆதரவினையும், நம்பிக்கையையும் பெற்றுத்தரும் என்று நாங்கள் நம்புகின்றோம்.

தங்களது கவனத்திற்கான எமது நோக்குகள்:
• ஓன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பிற்குள் தமது அடிப்படையான சுய ஆட்சி உரிமைகள் அங்கீகரிக்கக்கூடியதான நியாயமான ஒர் அரசியல் தீர்வினை தாங்கள் பெற்றெடுப்பீர்கள் என்ற நம்பிக்கையுடனேயே, முன்னெப்போதும் இருந்திராத எண்ணிக்கையில் தமிழ் மக்கள் தங்களுக்கு வாக்களித்தார்கள்.

• இந்த நாட்டில் போர் முடிவுக்கு வந்த காலகட்டத்தில் இழைக்கப்பட்ட போர்க் குற்றங்கள் மீதும், மனித உரிமை மீறல்களின் மீதும் ஒரு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதுவே தமிழ் மக்களின் வேண்டுதலாக கடந்த ஐந்தாண்டு காலமாகவே இருந்து வருகிறது.

• கடந்த காலங்களில், ஆயுதப் படையினரால் செய்யப்பட்ட குற்றங்கள் மீது நடத்தப்பட்ட இவ்வகையான உள்நாட்டு விசாரணைகளில் தாம் வைத்திருந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டு விட்டதாலேயே, தமிழ் மக்கள் இப்பொழுது சர்வதேச விசாரணையொன்றை வலியுறுத்தி வருகின்றார்கள். மேலும், இலங்கை ஆயுதப் படைகளைச் சேர்ந்தவர்கள் பெரும் போர் வீரர்களாக தென்னிலங்கையில் கற்பிதம் செய்யப்பட்டு வருவதால், ஒரு நேர்மையான உள்நாட்டு விசாரணையை நடத்தக்கூடிய அரசியல் விருப்பு தென்னிலங்கையில் இல்லாமலேயே இருந்து வருகின்றது. கொழும்பை மையமாகக் கொண்ட சிவில் சமூக அமைப்புக்கள் கூட இத்தகைய சிந்தனைக்கு இசைவாகவே செயற்படுகின்றன. உள்நாட்டு விசாரணை ஒன்றிற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத கொழும்பு மைய சிவில் சமூக அமைப்புக்களின் அமைதி கூட எமக்குக் கவலையளித்து நம்பிக்கையீனத்தை ஏற்படுத்துகின்றது. அதனால் போர்க் குற்றங்களை விசாரிக்க உருவாக்கப்படுகின்ற எந்த ஒரு பொறிமுறையும், இனப்பிரச்சினையின் ஆணிவேரைக் கண்டுபிடிப்பதற்கும் அதனை இல்லாதொழிப்பதற்கும் தாங்கள் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டினை வெளிப்படுத்துவதாக அமையவேண்டும்.

• கடந்த காலங்களில் காணாமற் போனோர் தொடர்பான ஆணைக்குழுக்களின் முன்னால் சாட்சியமளிப்பதற்குத் துணிந்த எமது மக்கள், அரச புலனாய்வுப் பிரிவினரால், உயிராபத்து மிக்க அச்சுறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளார்கள். எனவே எந்த விசாரணைக் குழுவின் முன்னாலும் சாட்சியமளிக்கின்ற எமது மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

• சர்வதேச விசாரணை ஒன்றை நாங்கள் கோருவதன் நோக்கம் எவரையுமே பழி வாங்குவதல்ல. மாறாக, நடந்த உண்மைகளை வெளிக்கொணர்வதும், பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் நீதி செய்யப்படுவதை உறுதிப்படுத்துவதும் மட்டுமே.

• இந்த விசாரணைகளை முன்னெடுப்பதன் மூலமாக பல தசாப்தங்களாக நீண்டுவரும் இனப்பிரச்சினையின் மூலகாரணிகளும் கண்டறியப்பட வேண்டும். அவற்றைக் கண்டறிவதன்மூலம் நியாயமான ஓர் அரசியல் தீர்வும் எட்டப்படவேண்டும்.

அந்த வகையில், விசாரணை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்படுவதற்கு முன்னதாக, தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கான சில முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று எமது கட்சியான ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பரிந்துரை செய்கின்றது.

1. எந்தவித வழக்குத் தாக்கல்களும் செய்யப்படாமல் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் எந்தவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக முழுமையாக விடுதலை செய்ய வேண்டும்.

2. கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழும், மக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் கைதுசெய்யப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் அனைத்து தமிழ் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். மேற்படி சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்வதானது, இந்த இரண்டு சட்டங்களையும் மீளப் பெற்றுவிடுவதாகத் தங்களது அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தாங்கள் உறுதிப்பாட்டோடு இருக்கின்றீர்கள் என்ற ஒரு பலமான செய்தியையும் சர்வதேச சமூகத்திற்கு அனுப்பும். அந்த வகையில் அனைத்துக் கைதிகளும் உடனடியாகவும், முழுமையாகவும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

3. சாட்சியங்கள் எதுவும் இல்லாமல், சொந்த வாக்குமூலங்களின் அடிப்படையில் மட்டும் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு, வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளும் ஒரு பொது மன்னிப்பின் அடிப்படையில் முழுமையாகவும், உடனடியாகவும் விடுதலை செய்யப்பட வேண்டும்.

4. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்ற அனைத்துத் தனியார் காணிகளும் அவற்றின் உரிமையாளர்களிடம் உடனடியாக மீளக் கையளிக்கப்படவேண்டும். நாற்பதாயிரம் தமிழ் மக்கள் இப்பொழுதும் இடம்பெயர்ந்தோர் முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு வழங்கப்பட்டுவந்த நிவாரணங்களும் நிறுத்தப்பட்டு விட்டன. ஆனால் அவர்களை அவர்களுடைய சொந்தக் காணிகளில் மீளக் குடியமர்த்துவதற்கான எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. அத்தோடு, மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் வாடகை வீடுகளில் குடியிருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே அவர்களது சொந்த நிலங்களில் உடனடியாக மீளக் குடியமர்த்தப்பட்டு தமது சாதாரண வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவேண்டும்.

5. பலவந்தமாகக் காணாமற்போகச் செய்யப்பட்டோர் பற்றிய உண்மைகள் வெளிச்சத்துக்குக் கொண்டுவரப்பட்டு அவர்களைப் பற்றிய தகவல்கள் பொதுமக்களுக்குப் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அண்மையில் நடந்த ஒரு நிகழ்வை ஒரு முன்னுதாரணமாக தங்களுக்குக் காட்ட எமது கட்சி விரும்புகின்றது: யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வரணி என்ற கிராமத்தில், விடுதலைப் புலிகளின் ஒரு மூத்த போராளியான விநாயகம் என்பவரின் மனைவியும், பிள்ளைகளும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். ஒர் இரவுப் பொழுதில் இனந்தெரியாத நபர்களினால் தங்களது வீட்டிற்கு அண்மையாக அவர்கள் வாகனமொன்றில் கொண்டுவரப்பட்டு இறக்கிவிடப்பட்டுள்ளார்கள். விநாயகம் அவர்களின் மனைவியும் பிள்ளைகளும், 2009 மே மாதத்தில் போர் முடிவிற்கு வந்தபொழுது இலங்கை ஆயுதப் படையினரிடம் சரணடைந்து, அதன் பின் காணாமற் போயிருந்தார்கள். அவர்களைப் பற்றிய எந்த விபரங்களும் கடந்து ஐந்தாண்டுகளாக அவர்களுடைய உறவினர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. திடீரென இப்பொழுது அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிகழ்வானது, காணாமற் போய்விட்ட ஏனையவர்களது உறவினர்கள் மத்தியில் ஒரு புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கையை கொண்டுவந்திருக்கின்றது. தங்களுடைய அன்புறவுகளும் இந்த நாட்டின் எங்கோ ஓர் மூலையில், இந்த நாட்டின் ஆயுதப் படையினரது காவலுக்குக் கீழ் உயிரோடு வாழுகின்றார்கள் என்று இந்த உறவினர்கள் நம்பத் தொடங்கி விட்டார்கள். காணாமற்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்களது இத்தகைய ஆதங்கமும், அங்கலாய்ப்பும், பதட்டமும் உடனடியாக ஒரு முடிவுக்குக் கொண்டுவரப்படவேண்டும்.

எமது பரிந்துரைகளைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதற்காக எமது கட்சியின் சார்பில்

தங்களுக்கு நன்றி.

தர்மலிங்கம் சித்தார்த்தன் (பா.உ).,
தலைவர்,
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (PLOTE)
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF)

DPLF submission01DPLF submission02