‘யுக்திய’ சுற்றிவளைப்பில் இதுவரையான காலப்பகுதியில் 17,837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 17 ஆம் திகதியிலிருந்து இன்று (29) அதிகாலை 12.30 வரையான காலப்பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 கிலோ 510 கிராம் ஹெரோயின், 06 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள், 288 கிலோகிராம் கஞ்சா, 118 கிலோ 50 கிராம் மாவா, 35 கிலோகிராம் ஏஷ் போதைப்பொருள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
850 சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன்,மேலும் 186 சந்தேகநபர்களிடம் சட்டவிரோத சொத்துகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. போதைக்கு அடிமையான 1187 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மொனராகலை – ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடவலவ சரணாலயத்திற்கு உட்பட்ட வெஹெரகொல்ல பிரதேசத்தில் நான்கரை ஏக்கர் பரப்பளவில் வளர்ந்திருந்த கஞ்சா தோட்டம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையை மேற்கொள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு 16 கிலோமீட்டர் தூரம் காட்டுக்குள் சென்று, இரண்டரை கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டி ஏற்பட்டது.
பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்ட கஞ்சா செடிகள் முற்றாக அழிக்கப்பட்டன.
மீட்கப்பட்ட தடயப்பொருட்கள் ஹம்பேகமுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒருவரின் சொத்துகள் தொடர்பிலும் புத்தளம் – கற்பிட்டி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதன்படி, இன்று குறித்த நபரிடம் இருந்து 2 மீன்பிடிப் படகுகள், இரண்டு என்ஜின்கள், மற்றும் வேன் ஒன்றை சட்டவிரோத சொத்துகள் விசாரணைப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட சொத்துகளின் பெறுமதி ஒரு கோடி ரூபாவை அண்மித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
மீட்டியாகொட பொலிஸார் நேற்று மாலை மாதம்பே பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 20 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்த 820 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும், 200 கிராம் கேரள கஞ்சாவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இவர் தென்னிலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒருவரின் உதவியாளர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை தடுத்து வைத்து விசாரிப்பதாக மீட்டியாகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இதனிடையே, பாணந்துறை – ஹிரண பிரதேசத்தில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.