முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இன்று குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அவர் இன்று முற்பகல் சென்றிருந்தார். சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் குற்றவியல் விசாரணை திணைக்களத்திடம் வாக்குமூலம் வழங்குமாறு முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு மாளிகாகந்த நீதவான் லோச்சனா அபேவிக்ரம நேற்று உத்தரவிட்டிருந்தார்.
அத்துடன், அமைச்சருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
இதேவேளை, முன்னாள் அமைச்சரை கைது செய்யுமாறு வலியுறுத்தி குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு முன்பாக இன்று காலை முதல் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் குழுமியிருந்ததுடன், அவர்கள் சாத்வீக முறையில் எதிர்ப்பிலும் ஈடுபட்டனர்.