இந்த வருடம் (2024) ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் நடத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்மரசிங்க தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகமான WION-க்கு வழங்கிய நேர்காணலின் போது ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார் இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் இந்திய வௌிவிவகார அமைச்சர் S.ஜெய்சங்கர் இடையிலான சந்திப்பு அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நடைபெற்றுள்ளது. நேற்று இந்த கலந்துரையாடல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அஸ்வெசும திட்டத்தில் மேலும் 4 இலட்சம் பயனாளர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள 20 இலட்சம் பயனாளர்களின் எண்ணிக்கையை மேலும் 4 இலட்சத்தினால் அதிகரிக்கவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். அஸ்வெசும கிடைக்காத 10 இலட்சம் பேரின் முறைப்பாடுகள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் நிலத் தொடர்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் ஆய்வுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் நேற்று (09) தெரிவித்தார். இதன் மூலம் கொழும்பு மற்றும் திருகோணமலை துறைமுகங்களை பொருட்கள் பரிமாற்ற மத்திய நிலையமாக மாற்றியமைக்க முடியும் என இந்து சமுத்திர மாநாட்டில் ஜனாதிபதி தெரிவித்தார். ஏழாவது இந்து சமுத்திர மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்ஷங்கர், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜெனி வோன் மற்றும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.