தற்போது நாடு உள்ள சூழ்நிலையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையே அவசியமாகவுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி – வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு தலைமை தாங்கி கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் நாடாளுமன்றத்துக்கும், நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதிக்கும் இடையிலான சம தன்மை பேணப்பட வேண்டும் எனவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சாந்தன் ஒரு வாரத்தில் இலங்கை செல்ல அனுமதிக்கப்படுவார் என சென்னை மேல்நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசின் சார்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியர் நாயகம் உறுதியளித்துள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன் உட்பட ஏழு பேர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டனர். இதனையடுத்து, விடுதலை செய்யப்பட்ட இலங்கையர்களான முருகன் மற்றும் சாந்தன் உள்ளிட்டோர் திருச்சி சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.