எதிர்வரும் 19ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டிற்கு இருவேறு நீதிமன்றங்கள் இன்று இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளன. கடந்த 21 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெற்ற கட்சியின் பொதுச் சபை கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட தெரிவுகளில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாகவும், அந்த தீர்மானங்களை ரத்து செய்து உத்தரவிடக்கோரியும் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. குறித்த மனுவை திருகோணமலை சாம்பல்தீவு – கோணேஷபுரியைச் சேர்ந்த சந்திரசேகரம் பரா என்பவர் தாக்கல் செய்திருந்தார்.
இந்தநிலையில், குறித்த மனு இன்றைய தினம் திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு அழைக்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் யாப்பின் ஊடாக அனுமதிக்கின்ற தொகையை விட அதிகளவான உறுப்பினர்கள் பொதுச் சபை கூட்டங்களில் பங்கேற்று, வாக்களித்துள்ளமையினால், குறித்த கூட்டம் சட்டத்திற்கு முரணானது என உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளார்.
இதனை ஆராய்ந்த, திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா, எதிர்வரும் 19 ஆம் திகதி திருகோணமலையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு இரண்டு வார காலம் தடையுத்தரவை பிறப்பித்ததுடன் குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 29ஆம் திகதி மீள அழைப்பதற்கும் நீதிபதி உத்தரவிட்டது.
குறித்த மனுவின் பிரதிவாதிகளாக இலங்கை தமிழரசுக் கட் சியின் முன்னாள் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீதரன், எம்.சுமந்திரன், மற்றும் சண்முகம் குகதாசன் உள்ளிட்ட 7 பேர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றமும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு தடைவிதித்து தீரப்பளித்துள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவொன்று இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.