கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்க தமிழக மீனவர்கள் தீர்மானித்துள்ளனர். தமிழக மீனவர்களை இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக கைது செய்கின்றமையை கண்டித்து மீனவர்களால் இன்று நடத்தப்பட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு சிறைத்தண்டனை விதிப்பதை கண்டித்து காலவரையறையற்ற போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பிலும் ராமேஷ்வரம் மீனவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றமை மற்றும் படகுகள் அரசுடைமையாக்கப்படுகின்றமை என்பவற்றை கண்டித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் ராமேஷ்வரத்தில் 200-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.