உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்திற்கான பிரதி இராஜாங்க செயலாளர் எலிசபெத் எம் எலன் நேற்று இலங்கை வந்துள்ளார். அவர் தமது விஜயத்தின்போது அரசாங்க அதிகாரிகள் ஊடகப் பிரதிநிதிகள் டிஜிட்டல் உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் இளைஞர் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்போது இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பங்காளித்துவம் இலங்கையின் தகவல் மற்றும் ஊடக வெளியைப் பாதுகாப்பது மற்றும் செழுமையை மேம்படுத்துவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வழிகள் குறித்து ஆராயப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.
தமது இலங்கை விஜயத்தை தொடர்ந்து அமெரிக்காவின் பொது இராஜதந்திரத்திற்கான பிரதி இராஜாங்க செயலாளர் எலிசபெத் எம் எலன் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். இதற்கிடையில் முகாமைத்துவம் மற்றும் வளங்களுக்கான அமெரிக்க பிரதி வெளியுறவு செயலாளர் ரிச்சர்ட் ஆர். வெர்மாவும் இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
அவர் தமது விஜயத்தின்போது இலங்கை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடனான சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் அவர் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை பார்வையிடவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொழும்பை ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கு குறித்த கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 553 மில்லியன் அமெரிக்க டொலர்களை அமெரிக்கா நிதியுதவிகளை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.