பொது போக்குவரத்து சேவைகளில் பெண்களிடம் தகாத முறையில் நடந்துக் கொள்பவர்களுக்கு எதிராக விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த விசேட நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் பணியகத்திற்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் ரேணுகா ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கமைய இரகசியமான முறையில் கெமரா பொறுத்தப்பட்ட சிவில் உடை அணிந்த காவல்துறை உத்தியோதகத்தர்கள் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். Read more
தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் ஏதிலிகளாக தஞ்சமடைந்துள்ள இலங்கை தமிழர்களுக்காக நிர்மாணிக்கப்பட்டுள்ள வீடுகள் நேற்று திறந்து வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள ஏதிலிகள் முகாமில் உள்ள இலங்கை தமிழர்களுக்காக புதுக்கோட்டை – தேக்காட்டூர் பகுதியில் புதிதாக 58 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் நேற்று அவற்றை திறந்து வைத்துள்ளனர். 3.56 கோடி இந்திய ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைமைத்துவ சபையின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுஜன ஐக்கிய முன்னணியின் யாப்பு மாற்றம் தொடர்பில் நேற்று இடம்பெற்ற நிறைவேற்றுக்குழு கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் திஸர குணசிங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கதிரை சின்னத்தில் பரந்த கூட்டணியுடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கவுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இதுவரை எவ்வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. அது தொடர்பில் கட்சியுடன் வேறாக கலந்துரையாட வேண்டுமென கோரப்பட்ட போதிலும் ஜனாதிபதி அதற்கான திகதியை இதுவரை பெற்றுத்தரவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இதுவரையில் தீர்மானிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாடி வீடுகளில் குடியிருக்கும் குறைந்த வருமானம் பெறும் 50,000 குடும்பங்களுக்கு வாடகை அறவிடுவதை இடைநிறுத்தி, அந்த வீடுகளின் உரித்துரிமையை அவர்களுக்கே வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மாடி வீடுகளுக்கு, அந்த கட்டணம் அறவிடப்படுவதை இடைநிறுத்தி, அதற்கான உரிமையை அவர்களுக்கே வழங்க 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்த வாரம் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்து சமுத்திர மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தெரிவித்தார். குறித்த மாநாடு அவுஸ்திரேலியாவின் தலைநகர் பேர்த்தில் இந்த மாதம் 9ஆம் மற்றும் 10ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. குறித்த மாநாட்டில் ஜனாதிபதி முக்கிய உரையொன்றையும் நிகழ்த்த உள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியதாகவும், அதனை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டதாகவும் ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது. அதனை வர்த்தமானியில் வௌியிட அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார். ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய செலவினங்களை, 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் தேர்தலுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 10 பில்லியன் ரூபாவில் முகாமைத்துவம் செய்ய வேண்டியுள்ளமை தொடர்பில் அமைச்சரவை கவனம் செலுத்தியுள்ளது.
வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் அரச வைத்தியசாலைகளுக்கு மேலும் 1300 வைத்தியர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்கள் தற்போது பயிற்சி நிறைவடையும் நிலையில் உள்ளதாக சுகாதார செயலாளர், விசேட வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டும் பயிற்சி முடித்த 590 வைத்தியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டது. இதுவரை காலமும் வெற்றிடமாக இருந்த அரச வைத்தியசாலைகளுக்கே இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக செயலாளர் குறிப்பிட்டார்.
உயர் நீதிமன்றம் பரிந்துரைத்த பல திருத்தங்களை கவனத்திற்கொள்ளாமல் நிகழ்நிலை காப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டமை தொடர்பில் Transparency International Sri Lanka நிறுவனம் அதிருப்தி வௌியிட்டுள்ளது. இது அரசாங்கம், பாராளுமன்றம், சட்டமா அதிபர், சபாநாயகரின் சட்டத்திற்கு முரணான செயற்பாடாகும் என அந்த நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பிற்கு முரணாக ஏதேனும் சட்டமொன்றை கொண்டுவருவதற்கு பாராளுமன்றம் முயற்சிக்கும் போது அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவதற்கு பிரஜைகளுக்கு அரசியலமைப்பின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமை இதன்மூலம் பாரதூரமாக மீறப்பட்டுள்ளதாக Transparency International Sri Lanka நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.