பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  ஹட்டன் – கொட்டகலையில் இன்று (01) தெரிவித்தார். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு இதனை தெரிவித்தார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஹட்டன் கொட்டகலை மைதானத்தில் இன்று காலை  ஆரம்பமானது.

தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார, மாலைத்தீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீட்,  இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் , கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன் உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் இதில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது, ஜனாதிபதி பின்வருமாறு உரையாற்றினார்,

‘பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக தோட்டத்தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் உழைத்தனர். அந்த தேயிலையை நாம் வௌிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். அதன் காரணமாக 2023 ஆம் ஆண்டிலும் 2024 ஆம் ஆண்டிலும் எமக்கு அந்நியச்செலாவணி கிடைத்தது. எனவே, நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நான் நன்றி கூறுகின்றேன். அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை நாம் 10,000 ரூபாவால் அதிகரித்தோம். அஸ்வெசும கொடுப்பனவை அதிகரித்தோம். நாம் இவ்வாறு செயற்படும்போது தனியார் துறையினரும் ஒவ்வொரு இடங்களில் சம்பளத்தை அதிகரித்தனர். தற்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களே எஞ்சியுள்ளனர். நேற்றிரவு முதல் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை 1700 ரூபாவாக அமைச்சர் மனுஷ நாணாயக்கார அதிகரித்துள்ளார். அதன் படி நாளாந்தம் அவர்களுக்கு 1700 ரூபா கிடைக்கும்.”

பெருந்தோட்ட அபிவிருத்திக்காக முன்னெடுக்கவுள்ள மேலும் பல திட்டங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி உறுதி வழங்கினார்.

பெருந்தோட்டங்களில் காணப்படும் தொடர் குடியிருப்புகளுக்கு பதிலாக, சட்டபூர்வமாக அவற்றை கிராமங்களாக அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி கூறினார்.

பெருந்தோட்டங்களில் நிலவும் கல்விப் பிரச்சினை, ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்திக்க கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நடவடிக்கை எடுப்பார் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தின கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான் தலைமையில் பண்டாரவளையிலிருந்து மோட்டார் சைக்கிள் பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டது.