ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தவிசாளராக செயற்படுகின்றமையை தடுத்து கடந்த மாதம் 4 ஆம் திகதி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவிற்கு எதிராக நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மனுவை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி D.N. சமரகோன் இன்று நிராகரித்தார். இது தொடர்பான உத்தரவை மாவட்ட நீதிமன்றமே கோர வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார்.
நேற்று ஆரம்பமாகிய கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் விடைத்தாள்களை மதிப்பிடும் பணி 2 கட்டங்களின் கீழ் மேற்கொள்ளப்படும் எனவும் அதற்காக சுமார் 35,000 பரீட்சகர்கள் தேவைப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் 3,527 மத்திய நிலையங்களில் நேற்று ஆரம்பமானது.
சம்பளம் உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொடர் பணிப்பகிஷ்கரிப்பு ஆறாவது நாளாக இன்றும் தொடர்கிறது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கும் 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் கல்விசாரா ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக இலங்கையின் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் 2 இலட்சம் மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.
சுற்றுலா விசா கட்டணங்கள் தொடர்பில் அமைச்சரவையில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். அதற்கமைய, வௌிநாட்டவர்கள் இலங்கைக்கு வருகைதரும் போது நபரொருவருக்கு 30 நாட்களுக்கான விசாவிற்காக அறவிடப்பட்ட 50 டொலர் என்ற பழைய கட்டணம் இன்று முதல் அவ்வாறே பேணப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.