2024ம் ஆண்டிற்கான சிறுபோகத்தின் போது, நெடுங்கண்டல் விவசாயிகளுக்கு அரச அதிகாரிகளால் திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாரபட்சமான நடவடிக்கை தொடர்பாக 13.05.2024 அன்று, மன்னார் கச்சேரி நுழைவாயில் முன்பாக நெடுங்கண்டல் விவசாயிகளால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது. பல சுற்று பேச்சுவார்த்தைகளின் பின்னரும் மன்னார் மாவட்ட செயளாளரினால் தீர்வு வழங்கப்பபடாததினால் விவசாயிகளால் மேற்படி ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

மேற்படி ஆர்பாட்டத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர்களின் ஒருவரும் வன்னி மாவட்ட பராளுமன்ற உறுப்பினருமான திரு. செல்வம் அடைக்கலநாதன், கூட்டணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் தோழர் ச.குமரேஸ், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் மன்னார் மாவட்ட செயளாளரும் கூட்டணியின் மாவட்டக் குழு உறுப்பினருமான தோழர். ஜேம்ஸ் மற்றும் மன்னார் மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் அருட் தந்தை மார்க்கஸ் அடிகளார் ஆகியோரும் இணைந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் அவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தையின் பின்னர் விவசாயிகளின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு, நெடுங்கண்டல் விவசாய அமைப்பின் கீழுள்ள புலவில் சிறுபோக நெற்செய்கைக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.