இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். யாழ். மானிப்பாயில் அமைந்துள்ள கிரீன் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங், வைத்தியசாலை செயற்பாடுகளை பார்வையிட்டார். இதன்போது, வைத்தியசாலை ஊழியர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். விஜயத்தில் யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி பேராசிரியர் R.சுரேந்திரகுமாரன்,  தென்னிந்திய திருச்சபையின் யாழ். மறைமாவட்ட ஆயர் வி.பத்மதயாளன், வைத்தியர்கள், ஊழியர்கள், அமெரிக்க தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், விஜயத்தின் போது இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வைத்தியசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நாட்டினார்.

இதேவேளை, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்  யாழ். சுன்னாகம் ஸ்கந்தவரோதயா கல்லூரிக்கும் சென்றிருந்தார்.

இதன்போது, மீள் சுழற்சி மற்றும் மரங்களை நடுதல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

இதேவேளை, வட மாகாணத்தில் உள்ள இலங்கையர்களுக்கு அமெரிக்காவின் தொடர்சியான ஒத்துழைப்பையும் ஆதரவுக்கான வழிகளையும் ஆராய்வதற்கான சந்திப்புகளை முன்னெடுப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிவில் சமூகம், இளைஞர்கள், உள்ளூர் அரச அதிகாரிகள், மதத் தலைவர்கள் ஆகியோரின் பலதரப்பட்ட கண்ணோட்டங்களை கேட்பதற்காக தாம் இந்த பயணத்தை முன்னெடுத்துள்ளதாக  இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.