ரஷ்யா யுக்ரைன் போரில் பங்கேற்பதற்காக இலங்கையர்களை ரஷ்யாவுக்கு அனுப்பிய வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகம் ஒன்றின் உரிமையாளர் மற்றும் அதன் முகாமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். நுகேகொடை – ஸ்டேன்லி திலகரத்ன மாவத்தை பகுதியிலுள்ள உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவரகம் ஒன்றின் உரிமையாளர் உள்ளிட்ட இருவரே இவ்வாறு கைதாகினர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. Read more
		    
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை சந்தித்துள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  சிவஞானம் சிறிதரன் , சார்ள்ஸ் நிர்மலநாதன்,  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரை அமெரிக்க தூதுவர் நேற்று  சந்தித்துள்ளார். வட மாகாண மக்கள் எதிர்கொள்ளும் தொடர்ச்சியான சவால்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது X பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  
இம்முறை சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கான பாடசாலை உயர் தர கற்றல் செயற்பாடுகள் ஜூன் 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான சுற்றுநிருபம் அனைத்து மாகாணங்களினதும் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிருபம் இதுவரை கிடைக்கப்பெறாத அதிபர்கள், மாகாண அல்லது வலய கல்வி அலுவலகங்களில் அது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.  
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard இன்று (16)  நாட்டிற்கு வருகை தந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Agnès Callamard-இன் தெற்காசியாவிற்கான முதல் விஜயம் இதுவாகும். Agnès Callamard எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி, இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலும் அவர் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தில் மூன்று மாதங்களில் 49 கைதிகள் சிறைச்சாலைகளில் இருந்து தப்பியோடியுள்ளனர். தப்பியோடியவர்களில் இருவர் மாத்திரமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும்  ஊடகப்பேச்சாளருமான காமினி பி.திசாநாயக்க தெரிவித்தார். தப்பியோடியவர்களை கைது செய்யும் நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.  இதேவேளை, வீரவில திறந்தவௌி சிறைச்சாலை முகாமிலிருந்து நேற்றிரவு கைதி ஒருவர் தப்பியோடியுள்ளார். 
இலங்கையின் காங்கேசன்துறை மற்றும் தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் இடையில் ஆரம்பமாகவிருந்த கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே 19ஆம் திகதி இந்த கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என கப்பல் சேவையை முன்னெடுக்கவுள்ள நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த சேவையில் ஈடுபடும் கப்பலுக்கு சட்டரீதியான அனுமதி கிடைக்காமை மற்றும் நிலவும் பலத்த மழையுடனான வானிலை காரணமாக இந்த கப்பல் போக்குவரத்து பிற்போடப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதை தடுக்கும் தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது. குறித்த மனுவை நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்திருந்தார். ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நியமிக்கப்பட்டமை சட்டவிரோதமானது என அறிவிக்குமாறு கோரி குறித்த மனுவில் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 
திறைசேரிக்கு கிடைத்துள்ள வரி வருமானத்தை கருத்தில் கொண்டு, கல்விசாரா ஊழியர்களின் கொடுப்பனவுகள் குறித்து இந்த வாரத்தில் தீர்மானமொன்று எடுக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காக வருடாந்தம் சுமார் 1.3 பில்லியன் ரூபா செலவாகும் என தற்போது மதிப்பிடப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்றும் தொடர்கிறது.