வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வௌியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இன்று  வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்திற்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கண்டறியப்பட வேண்டுமெனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.  Read more
		    
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் 16ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. பல்கலைக்கழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழுவின் இணைத் தலைவர் தம்மிக எஸ்.பிரியந்த இதனைத் தெரிவித்துள்ளார். வேதன பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்காக நிலவும் சட்டம் கட்டாயமாக திருத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரதமருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இது தொடர்பில் பிரஸ்தாபிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
திருகோணமலை – சேனையூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் சர்வதேச சிவில் மற்றும் குடியியல் உரிமைகள் தொடர்பிலான இணக்கப்பாட்டு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேகநபர்கள் நால்வரும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில்  விடுவிக்கப்பட்டுள்ளனர்.  தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் குறித்த சந்தேகநபர்கள் நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.  
மாகாண மட்ட பாடசாலைகளில் தமிழ் மற்றும் ஆங்கில பாட ஆசிரியர்களுக்கு 700 வெற்றிடங்கள் நிலவுவதாக மேல் மாகாண சபை தெரிவித்துள்ளது. இதனால் குறித்த மொழிப் பாடங்களை கற்கும் மாணவர்கள் பாரிய சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மேல் மாகாண பிரதம செயலாளர் தம்மிகா விஜயசிங்க தெரிவித்தார். போதியளவு தகுதி வாய்ந்த பட்டதாரிகள் இன்மையினால் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதில் சிக்கல் காணப்படுதாக அவர் கூறினார்.  
இம்முறை இடம்பெற்ற கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் போது, பரீட்சை மத்திய நிலையமொன்றில் புவியியல் பாட வினாத்தாளின் ஒரு பகுதி வழங்கப்படாமை தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.  மினுவாங்கொடை அல்அமீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குறித்த பரீட்சை மத்திய நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய 14 பரீட்சார்த்திகள் இந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.  
பிரித்தானிய நகரம் ஒன்றின் புதிய முதல்வராக இலங்கையிலிருந்து ஏதிலியாகச் சென்ற தமிழர் ஒருவர் பதவியேற்றுள்ளார். தொழிற் கட்சியின் உறுப்பினரான இளங்கோ இளவழகன் என்பவரே இப்ஸ்விச் (Ipswich) மாநகர முதல்வராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த புதன்கிழமை (15) இடம்பெற்ற குறித்த பதவியேற்பு நிகழ்வின் போது இப்ஸ்விச் இந்து சமூகத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.