நாட்டின் அந்நியச் செலாவணிக்கான அச்சாணியாகத் திகழும் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயம் இன்றும் இழுபறி நிலையிலேயே உள்ளது. இந்த நிலையில், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பான புதிய அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது. இதனிடையே, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு உரிய  சம்பளத்தை வழங்க மறுக்கும் பெருந்தோட்ட நிறுவனங்களின் காணி குத்தகை உடன்படிக்கையை இரத்து செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வௌியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானியில் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1350 ரூபா வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. Read more
		    
சட்டவிரோதமாக மலேசியாவிற்குச் சென்ற 1,608 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. மலேசியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி வரையிலான 2 மாத காலப்பகுதியில் குறித்த 1,608 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மலேசிய அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்திற்கு அமைய இந்த செயற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையை தேசிய வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்படி நாட்டின் மூன்றாவது தேசிய வைத்தியசாலையாக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை அமையவுள்ளது.
எதிர்வரும் 28ஆம் திகதி நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. உத்தியோகபூர்வ சீருடை கொடுப்பனவிற்கு இணையாக ஏனையவற்றுக்கு வழங்கப்பட வேண்டிய கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்படவில்லை எனவும் விசேட கொடுப்பனவை அதிகரிப்பதற்கான சுற்றறிக்கை, 15 பிரிவினரை விடுத்து வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் சானக்க தர்மவிக்ரம தெரிவித்தார்.