அமரர் வை.விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பளை அரசர்கேணி வளர்பிறை முன்பள்ளிச் சிறார்களுக்கு இன்று (29.05.2024) கற்றல் உபகரணங்கள், விளையாட்டு உபகரணங்கள், சிற்றுண்டி மற்றும் மதிய உணவு என்பன வழங்கிவைக்கப்பட்டன. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக ஆறாவது செயற்பாடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
		    
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க்(Julie Chung), தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரை சந்தித்துள்ளார். நாட்டில் நடத்தப்படவுள்ள தேர்தல்கள் தொடர்பில் வினவுவதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தேர்தலை நடத்துவது தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் இதன்போது அமெரிக்க தூதுவர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் வினவியுள்ளார்.  
இன்று உலகம் முழுவதும் Starlink இணையச் சேவை முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 41,393 Starlink இணைய இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், Starlink இணையச் சேவை தற்போது முழுமையாக மீட்டமைக்கப்பட்டுள்ளதாக, Starlink நிறுவனத்தின் உத்தியோகபூர்வ X பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பொறுப்பற்ற கூற்றுகள் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஜனநாயக ஆட்சியில் சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனை  குறிப்பிட்டார்.  
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக பதவி வகிப்பதை தடுத்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் அனைத்து பாடசாலைகளிலும் வழமை போன்று கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகி வரும் பின்னணியில் கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்த பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகள், 65,531 தனியார் பரீட்சாத்திகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.