அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலை நடத்தவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். பொறுப்பற்ற கூற்றுகள் மூலம் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த ஜனநாயக ஆட்சியில் சந்தர்ப்பம் கிடைக்காது எனவும் அவர் கூறினார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே பிரதமர் இதனை  குறிப்பிட்டார்.  Read more
		    
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக பதவி வகிப்பதை தடுத்து பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
நாளை மற்றும் நாளை மறுதினங்களில் அனைத்து பாடசாலைகளிலும் வழமை போன்று கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுதினம் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு தயாராகி வரும் பின்னணியில் கல்வி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார இறுதியில் வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது. குறித்த பரீட்சையில் 346,976 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். அவர்களில் 281,445 பாடசாலை பரீட்சாத்திகள், 65,531 தனியார் பரீட்சாத்திகள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா நாலாம்கட்டை விசேட தேவைக்குட்பட்டோருக்கான புனர்வாழ்வு அமைப்பான வரோட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இன்று விசேட மதிய உணவு வழங்கி வைக்கப்பட்டது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் இரத்தினகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக ஐந்தாவது செயற்பாடாக இந்நிகழ்வு இன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு விசுவமடு ரெட்பானா வள்ளுவர்புரம் ‘நிலா முற்றம்’ மகளிர் அமைப்பின் ஓராம் ஆண்டு நிறைவு விழா நேற்றையதினம் இடம்பெற்றது. நிகழ்வில் கட்சியின் பொருளாளர் க.சிவநேசன், கட்சியின் கனேடிய கிளையின் அமைப்பாளர் திரு. கந்தசாமி அவர்கள், கட்சியின் இளைஞர் பிரிவு பொறுப்பாளரும், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மாவட்டக்குழு இணைப்பாளருமான ஜூட்சன், கட்சியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் க.தவராஜா மாஸ்டர், கட்சியின் மாவட்ட மகளிர் பிரிவு பொறுப்பாளர் கேதினி, கட்சியின் புதுக்குடியிருப்பு முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கிருபாலினி, கட்சியின் முள்ளிவளை பிரதேச அமைப்பாளர் சஞ்சீவன் மற்றும் மகளிர் பிரதிநிதிகளும் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத்தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைப்பது தொடர்பில் பாராளுமன்றத்திற்கு யோசனை முன்வைக்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. தேவையேற்படின், மக்கள் கருத்துக்கணிப்பின் ஊடாக அதனை நிறைவேற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதாரத்தை வளர்ச்சியடைச் செய்வதற்கான இயலுமை தற்போதைய ஜனாதிபதிக்கு காணப்படுவதாகவும்  அவர் கூறியுள்ளார். 
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து ஊழியர் ஒருவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் விபத்து, அவசர பிரிவிற்குள் நேற்றிரவு 10 மணியளவில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு இருவர் நுழைந்துள்ளனர். விபத்தில் கையில் காயமேற்பட்ட ஒருவருடன் குறித்த நபர் மோட்டார் சைக்கிளை வைத்தியசாலைக்குள் செலுத்தியுள்ளார். இது தொடர்பில், வைத்தியசாலை ஊழியர் ஒருவர்  மோட்டார் சைக்கிளில் வருகை தந்தவரிடம் கேள்வி எழுப்பியபோது, குறித்த நபர் அவரைத் தாக்குவது CCTV-இல் பதிவாகியிருந்தது.  
ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு 3 நிறுவனங்கள் முன்வந்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அவற்றில் 2 வௌிநாட்டு நிறுவனங்களாகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவற்றில் ஒரு நிறுவனம் தெரிவு செய்யப்பட்டு, ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கூறினார். இதற்காக விலைமனு கோரலை சமர்ப்பித்துள்ள நிறுவனங்களின் நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து பொருத்தமான நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கை தற்போது விலைமனுக்கோரல் சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ISIS உறுப்பினர்கள் என கூறப்படும் 4 இலங்கையர்களையும் இலங்கையிலிருந்து ஒஸ்மன் ஜெராட் என்பவரே வழிநடத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். சந்தேகநபர் தொடர்பான தகவல்களை வழங்கும் நபருக்கு 20 இலட்சம் ரூபா நன்கொடையாக வழங்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஒஸ்மன் ஜெராட் எனும் நபர் தனது உருவத்தை மாற்றியிருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். 46 வயதான குறித்த சந்தேகநபர் தெமட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர்.