18ஆவது இந்திய மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 286 ஆசனங்களையும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 202 ஆசனங்களையும் ஏனைய கட்சிகள் 55 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கெண்ணும் நடவடிக்கை நேற்று(04) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில், இறுதித் தொகுதியின் வாக்கெண்ணிக்கை இன்று அதிகாலை 5.30 க்கு நிறைவடைந்தது.
இதனையடுத்து வௌியாகிய உத்தியோகபூர்வ முடிவுகளின் அடிப்படையில் பாரதிய ஜனதா கட்சி 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளிலும் சமாஜ்வாதி கட்சி 37 தொகுதிகளிலும் அகில இந்திய திரிணாமூல் காங்கிரஸ் 29 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்தல் முடிவுகள் வௌியாகியதன் பின்னர் கட்சி ஆதரவாளர்களை சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து மூன்றாவது தடவையாகவும் ஆட்சியமைக்கும் நம்பிக்கையுள்ளதாக தெரிவித்துள்ளார்.