முதலீடுகளுக்காக சொத்துகளை வழங்கும் போது மக்களுக்கு வௌிப்படைத்தன்மையுடன் அது தொடர்பில் அறிவிக்குமாறு வலியுறுத்தி மன்னார் காவையன் குடியிருப்பு பகுதி மக்கள் இன்று  கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். மன்னார் பிரதேச செயலாளர் பிரிவின் காவையன் குடியிருப்பில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள காணி எதற்காக வழங்கப்படவுள்ளது என்பதனை வௌிப்படைத்தன்மையுடன் அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி பிரதேச மக்கள் இன்று கவனயீர்ப்பில்  ஈடுபட்டனர்.

இன்று காலை குறித்த பகுதிகளிலுள்ள காணிகளுக்குள் சிலர் அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டத்திற்கு வருகை தந்திருந்த சந்தர்ப்பத்தில், பிரதேச மக்கள் தமது எதிர்ப்பினை தெரிவித்திருந்தனர்.

கவனயீர்ப்பு நடைபெற்ற இடத்திற்கு சென்றிருந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், அங்கிருந்த பொதுமக்களுடன் கலந்துரையாடினார்.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரனிடம் வினவிய போது, நாளைய தினம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மன்னாருக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்று கலந்துரையாட தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.