உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களுக்கும் தமிழ் தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு இன்று (20.06.2024) மாலை 5மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. இச்சந்திப்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன்(புளொட்), பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்(ரெலோ), தமிழரசுக் கட்சி சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.சிறீதரன், எம்.ஏ. சுமந்திரன், இ.சாணக்கியன், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் க.வி. விக்னேஸ்வரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தார்கள்.
இதன்போது தமிழ் மக்களின் பிரச்சினைகளை பிரத்தியேகமாக நன்கு அறிந்தவர் என்கிற ரீதியில் மோடி தலைமையில் தங்களது கட்சி ஆட்சிக்கு வந்து தாங்கள் மீண்டும் பதவிக்கு வந்ததையிட்டு மிகவும் சந்தோசம் என்றுகூறி தமிழ் தேசியக் கட்சிப் பிரதிநிதிகள் இந்திய வெளிவிவகார அமைச்சருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.
தொடர்ந்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஒவ்வொருவராக கருத்துக்களைக் கேட்டறிந்து கொண்டார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தவிர்ந்த ஏனையோர், 13ஆவது திருத்தத்தை அமுல்ப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவற்றில் பல விடயங்களை இல்லாது செய்துள்ளார்கள். ஆகவே, மாகாணசபை தேர்தலை நடத்தி, மாகாண சபைகளை முழுமையாக இயங்கச் செய்வதற்கு நீங்கள் உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டார்கள்.
இங்கு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கஜேந்திரன் 13ஆவது திருத்தம், மாகாணசபை தேவையில்லையென்று தெரிவித்தார்.
தொடர்ந்து பொது வேட்பாளர் பற்றி பேசப்பட்டபோது, பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன், தான் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிப்பதாக தெரிவித்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தான் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவதை எதிர்ப்பதாகக் கூறினார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரன், பொது வேட்பாளர் விடயம் இப்போது கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது, சிவில் சமூகத்தினர் இது சம்பந்தமாக தொடர்ந்து பேசி வருகின்றார்கள். அதற்கு சில கட்சித் தலைவர்களும் ஆதரவாக உள்ளார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து பொது வேட்பாளர் விடயத்தை தாம் முழுமையாக எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், பொது வேட்பாளர் விடயம் இப்போது கலந்துரையாடல் மட்டத்திலேயே உள்ளது என்றார்.
மேலும், கருத்துக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு கிழக்கில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு பற்றி விளக்கியதோடு, புதைபொருள் திணைக்களத்தின் பெயரில் காணி அபகரிப்பு, காடு அழிப்பு என்பன தொடர்பிலும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துக் கூறிய பாராளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், இது விளையாட்டாக எடுக்கக்கூடிய விடயமல்ல. நன்கு திட்டமிட்டு கிழக்கு மாகாணத்தைப் போல வடக்கிலும் குடிப்பரம்பலை மாற்றுவதற்கு எடுக்கப்பட்டு வருகின்ற நடவடிக்கையாகும். இந்த திட்டமிட்ட செயற்பாடானது யுத்தம் முடிவடைந்த உடனேயே ஆரம்பிக்கப்பட்டது என்றார்.