சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் உடனடியாக அறிவிக்க தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி 0112 421 820 மற்றும் 0112 421 111 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக பாதிப்புகள் தொடர்பில் அறிவிக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை அறிவிப்பதற்கும் தேவையான உதவிகளைப் பெற்றுக் கொள்வதற்கும் 117 எனும் துரித அழைப்பு இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதை தவிர்க்குமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிற்கு தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த மனு கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் குறித்த மனு மீதான விசாரணையை கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி சமரி வீரசூரியவுக்கு மாற்றுவதாக நீதிபதி சந்துன் விதான இன்று அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார். மாத்தறையில் 4 மரணங்களும் இரத்தினபுரியில் 5 மரணங்களும் கொழும்பு சீதாவக்க பகுதியில் 3 மரணங்களும் பதிவாகியுள்ளன. இதுவரை ஐவர் காணாமல் போயுள்ளனனர். இதனிடையே, 23 மாவட்டங்களைச் சேர்ந்த 87,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 1,700 ரூபாவாக அதிகரித்து தொழில் அமைச்சர் வெளியிட்ட வருத்தமானிக்கு எதிராக இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது என கொழும்பு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (03.06.2024) உத்தரவு பிறப்பித்துள்ளது பெருந்தோட்ட தொழிலாளர்களின் 1700 ரூபாய் சம்பள உயர்வு வழங்க தொழில் அமைச்சு கடந்த மாதம் 21 ஆம் திகதி வர்த்த மணி அறிவித்தலை வெளியிட்டிருந்தது. இந்த வருத்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் இன்று காலை தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். இந்தியாவில் இருந்து சட்ட விரோதமான முறையில் படகில் இவர்கள் ஊர்மனைக்கு வந்துள்ளனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த 5 நபர்கள், கடற்படையினரால் விசாரணைக்கு உற்படுத்திய பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கான நீடிக்கப்பட்ட நிதிவசதி திட்டத்தின் 2ஆம் மதிப்பாய்வு தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கூட்டத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி ஆராயப்படவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுச் சபை கூட்டம் சீசெல்ஸில் இன்று ஆரம்பமாகின்றது. இந்நிலையில் இலங்கை தொடர்பான மதிப்பாய்வின் பின்னர் இலங்கைக்கு மேலும் 330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப் பெறும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
க.பொ. த உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ். இந்துக்கல்லூரி மாணவனை பாராளுமன்ற உறுப்பினர் த. சித்தார்த்தன் அவர்கள் நேரில் சென்று பாராட்டியபோது…
அமரர் வை.விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவாக நுவரெலியா தலவாக்கலை வாழைமலை தோட்டத்தில் அமைந்துள்ள ஆக்ரா அறநெறிப் பாடசாலையைச் சேர்ந்த 44 பிள்ளைகளுக்கு இன்று (02.06.2024) விசேட மதிய உணவு வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)யின் சுவிஸ் உறுப்பினர் திரு. விஜயநாதன் ரட்ணகுமார் அவர்கள் தனது தந்தையாரான இளைப்பாறிய இலங்கை நீதிமன்ற முதலியார் அமரர் வைத்திலிங்கம் விஜயநாதன் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு வழங்கிய நிதியில் கட்சியின் சமூக மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக ஏழாவது செயற்பாடாக இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் செப்டெம்பரில் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை கடந்த மாதம் 6ஆம் திகதி ஆரம்பமானது. இதில் 452,979 பரீட்சாத்திகள் தோற்றியிருந்தனர். இவர்களில் 387,648 பாடசாலை பரீட்சாத்திகளும், 65,331 தனியார் பரீட்சாத்திகளும் அடங்குகின்றனர்.