அரச நில அளவையாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை இன்றும் தொடர்கின்றது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாமையால், இன்று ஆறாவது நாளாகவும் தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடர்வதாக அரச நில அளவையாளர் சங்கத்தின் தலைவர் துமிந்த உந்துகொட தெரிவித்துள்ளார். இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் சங்கம் ஆரம்பித்துள்ள தொழிற்சங்க போராட்டம் இன்று 10 ஆவது நாளாகவும் தொடர்கின்றது. Read more
இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் தற்போது அனுமதி வழங்க முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த திட்டத்திற்கான மதிப்பீடு மற்றும் அவற்றின் ஊடாக சூழலுக்கு ஏற்படக் கூடிய தாக்கம் தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் வழங்கப்பட்ட உரிமத்தின் விபரங்கள் உள்ளிட்டவற்றின் மேலதிகத் தகவல்களை சமர்ப்பிக்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கை ஏற்படுத்திக்கொண்டுள்ள உடன்படிக்கையை தொடர்ச்சியாக பேணுவது அவசியமென IMF வலியுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் சிரேஷ்ட தூதுக்குழுவின் பிரதானி பீட்டர் ப்ரூவர் (Peter Breuer) இன்று (14) முற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார். செயற்றிட்ட இலக்குகளை அடைவதற்கான அவதானிப்புகள் மற்றும் மாற்று முன்மொழிவுகள் குறித்து அறிய தாம் தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், அவை சாத்தியமானவையாகவும் செயற்றிட்ட காலப்பகுதிக்குள் அடையக்கூடியவையாகவும் காணப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு கல்வி அமைச்சின் அனுமதி கோரப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் தெரிவித்தார். எனினும், ஆசிரியர் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்ட வடமத்திய மாகாண பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நிதி இல்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களை சேவையில் இணைத்துக்கொள்வதாக இருந்தால், அமைச்சரவையின் அனுமதி பெறப்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர குறிப்பிட்டார்.
2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்காக ஒன்லைன் ஊடாக விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கையை இன்று ஆரம்பிப்பதாக பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய இன்று(14) காலை 06 மணி முதல் www.ugc.ac.lk எனும் இணையத்தளத்திற்குள் பிரவேசித்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியுமென ஆணைக்குழு தெரிவித்துள்ளது. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க அடுத்த மாதம் 05 ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
தபால் சேவை ஊழியர்களின் பணிப்கிஷ்கரிப்பால் 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்கியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கடிதங்களை எதிர்வரும் 2 நாட்களுக்குள் விநியோகிக்க நடவடிக்ைக எடுப்பதாக ஒன்றிணைந்த தபால் ஊழியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளருடன் நேற்று(13) கலந்துரையாடிய போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க பிரித்தானியாவிற்கு இன்று அதிகாலை பயணமானார். எதிர்வரும் 15 ஆம் திகதி லண்டனில் நடைபெறவுள்ள இலங்கையர்களின் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே அவர் பிரித்தானியா பயணித்தார். இங்கிலாந்தில், தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் இலங்கையர்களுடன் பல மாநாடுகளில் அனுர குமார திசாநாயக்க பங்கேற்கவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் – அச்சுவேலி பத்தமேனி காளிக்கோவில் பகுதியைச் சேர்ந்த எமது பிராந்திய செய்தியாளர் தம்பித்துரை பிரதீபனின் வீட்டின் மீது இன்று அதிகாலை அடையாளந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளது. ,அத்துடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் முச்சக்கரவண்டி ஒன்றுக்கும் உந்துருளி ஒன்றுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு உந்துருளிகளில் வருகை தந்த ஐவர் அடங்கிய குழு கூரிய ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
தபால் ஊழியர்கள் நேற்று நள்ளிரவு முதல் சுகவீன விடுமுறை தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக தற்போது தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் இடையூறுகள் காணப்படுவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்துள்ளார்.