தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் அவர்களின் மறைவுக்கு ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமிழர் தரப்புச் செயற்பாட்டாளர்களில் வயதில் மூத்தவரும், முதிர்ந்த அனுபவம் கொண்டவருமான இரா. சம்பந்தன் அவர்கள், யுத்தத்தின் பின்னர், பெரும்பான்மையான காலப் பகுதியில், தமிழ்ச் சமூகத்தின் குரலாக, தென்னிலங்கை சமூகம் மற்றும் சர்வதேச சமூகத்தின் மத்தியில் அங்கீகாரம் பெற்றிருந்தார்.
பொது வெளியிலும், ஊடகங்களுடனான செவ்விகளின் போதும் கருத்துகள் வெளிப்படுத்தும்போது, நிதானமான, வரலாற்றுத் தரவுகளுடனான அவருடைய சொல்லாடல்கள் மற்றும் கருத்துப் பகிர்வுகள், அரசியல் பரப்பில் இயங்குகின்ற அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முன்னுதாரணமான பண்பாகும்.
அவரது இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர், உறவினர்கள், ஆதரவாளர்களுக்கு எமது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.