கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் இரட்டைக்குளம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேருந்து சாரதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததை அடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அத்துடன், காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைகளுக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்களில் மூவர் சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்றும் பாரவூர்தி ஒன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.