மட்டக்களப்பு – கரடியனாறு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைக்காடு பிரதேசத்திலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. காரைக்காடு பகுதியில் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளில் 20 ஆயிரம் T56 ரக துப்பாக்கி ரவைகள், 300 மிதிவெடிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு மாவட்ட விசேட அதிரடிப்படையின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதியின் உத்தரவிற்கு அமைய அகழ்வுப் பணிகள் இடம்பெற்றுள்ளன.
		    
கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான சலுகைக் கடன் திட்டத்தை மீள வழங்குவதற்கு ஜெய்கா நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, இலகுக் கடன் வேலைத்திட்டத்தின் கீழ் 170 பில்லியன் ரூபா ஜெய்கா நிறுவனத்தினால் வழங்கப்படவுள்ளது. 
தமது பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு ரயில் நிலைய அதிபர்கள் தீர்மானித்துள்ளனர். தமது பிரச்சினைக்கான தீர்வு கிடைக்காததால் தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுப்பதாக ரயில் நிலைய அதிபர்களின் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில் நிலைய அதிபர்கள் நேற்று(09) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளனர். 5 வருடங்களுக்கு ஒருமுறை வழங்கப்படும் பதவியுயர்வு வழங்கப்படாமை உள்ளிட்ட பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது.  
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் அரசியலமைப்பின் 2 சரத்துகளில் குறிப்பிடப்பட்டுள்ள வருடங்களின் எண்ணிக்கையை திருத்தியமைப்பதற்காக அரசியலமைப்பு திருத்த சட்டமூலமொன்றை தயாரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. குறித்த யோசனை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று(09) முன்வைக்கப்பட்டுள்ளது.  அரசியலமைப்பின் 30 (2) சரத்தில் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.