திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் இருவர் துபாயில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். துபாய்க்கு சென்ற குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், 2 குற்றவாளிகளையும் இன்று காலை நாட்டிற்கு அழைத்து வந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். கங்கானம்கே திமுத்து சதுரங்க பெரேரா மற்றும் களுந்துர தினேஷ் ஷியமந்த டி சில்வா ஆகிய 2 குற்றவாளிகளே துபாயிலிருந்து அழைத்து வரப்பட்டனர்.

திமுத் சதுரங்க பெரேரா மட்டக்குளி பகுதியில் வைத்து ஒருவரை  சுட்டுக் கொன்றதாக கொழும்பு குற்றப்பிரிவினால் அவருக்கு எதிராக ஆட்கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினேஸ் ஷியமந்த மீது கொஹுவல பகுதியில் ஒருவரை கொலை செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை,  துப்பாக்கிச் சூடு நடத்திய ஆயுததாரியின் மோட்டார் சைக்கிளை செலுத்தியமை மற்றும் ஹெரோயின் வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதுடன் அந்த வழக்கு ஹோமாகம மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இருவரையும் கைது செய்ய சர்வதேச பொலிஸாரால் அண்மையில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.