பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதாகப் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கம் உறுதியளித்துள்ள போதிலும் குறித்த சட்டம் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத் துணை பணிப்பாளர் மீனாட்சி கங்குலி இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தின் கீழ் பாதிப்படைந்த சிலர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தும் தடுப்புக் காவலில் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம், விமர்சகர்களை மௌனமாக்குவதற்கும், சிறுபான்மை சமூகங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் அடிப்படையற்ற விதத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துகின்றது.

இதனால் பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக இரத்து செய்யப்பட வேண்டும்.

துறைசார் வல்லுநர்கள் மற்றும் சிவில் சமூகத்தினருடன் கலந்துரையாடி, உரிமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இலங்கை அதிகாரிகள் உருவாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.