1983 ம் ஆண்டு ஆடி மாதம் 25 மற்றும் 27ம் நாட்களில், வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள், அரச படைகள் மற்றும் சிறை அதிகாரிகளின் அனுசரணையுடன், காடையர்களாலும் கைதிகளாலும், சிறைக்கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் படுகொலை செய்யப்பட்ட, 53 ஈழப் புதல்வர்களினதும் 41வது நினைவு நாளில் அவர்கள் அனைவரையும் நினைவிற்கொண்டு, அவர்களின் விடுதலைக் கனவுகளையும் இனப் பற்றுதலையும் போற்றிடுவோம், எம் அஞ்சலிகளையும் காணிக்கையாக்குவோம்.
		    
2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்களின் ஊடாக சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சங்கானை சிவப்பிரகாசா ஆரம்ப பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரம் மற்றும் விளையாட்டு கழகங்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்றையதினம் நடைபெற்றது. நிகழ்வில் பிரதேச செயலாளர், கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் கங்காதரன் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் அ.கௌதமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இலங்கை உள்ளிட்ட 55 நாடுகளுக்கு இலவச விசா திட்டத்தை அல்ஜீரியா அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய விசா கொள்கையை அறிமுகப்படுத்தியதன் மூலம் வட ஆபிரிக்க நாடுகளின் சுற்றுலாத்துறை முன்னேற்றம் அடைந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அல்ஜீரியாவில் சுற்றுலாப் பயணிகளுக்கான பயண நடைமுறைகளை இலகுவாக்குவதன் மூலம் சுற்றுலாவை மேம்படுத்த இந்தப் புதிய இலவச விசா கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அல்ஜீரியா தெரிவித்துள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீதான தடையை மேலும் 6 மாதங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் தடை செய்யப்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கு நிதி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் வாக்களிக்க முடியாது போகுமென்ற அச்சத்தைக் கொண்டுள்ள வாக்காளர்கள் பிறிதொரு வாக்கெடுப்பு நிலையம் ஒன்றில் வாக்களிப்பதற்கான வாய்ப்புள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை அனைத்து மாவட்டங்களினதும் தெரிவத்தாட்சி அலுவலர் அல்லது மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ள முடியும். 
கடவுச்சீட்டுக்கு முன்பதிவு செய்த விண்ணப்பதாரர்கள் மாத்திரமே குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாமல் செல்வதைத் தவிர்க்குமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்குஇ முன்னுரிமை அடிப்படையில் கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.