இலங்கையில் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்கள் இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரகம் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஆகியன இணைந்து இலங்கை அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் அவர்களை விடுவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் குறித்த 20 இந்திய மீனவர்களையும் நாளைய தினம் இந்தியாவுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மூன்று வெவ்வேறு வர்ணங்களில் புதிய அம்சங்களுடன் கூடிய கடவுச்சீட்டுகளை வழங்கவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். சாதாரண உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கானது என மூன்று வெவ்வேறு வண்ணங்களில் புதிய அம்சங்களுடன் அவை வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கொழும்பு மாவட்ட நீதிபதி சதுன் விதான முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த தடையை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4ஆம் திகதி வரை நீடிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சகல மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளும் மாவட்ட பிரதி மற்றும் உதவி தேர்தல்கள் ஆணையாளர்களும் கொழும்பில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு நாளை மறுதினம் (03) அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக இதுவரையில் 6 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட 125-இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நியமனம் வழங்குதல், இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு வழங்குதல் ஆகியன இதற்குள் அடங்குவதாக ஆணைக்குழுவின் முறைப்பாட்டு பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் தேர்தல் தொடர்பில் முறைப்பாடுகள் இருப்பின் தேர்தல் ஆணைக்குழுவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு பிரிவில் அவற்றை முன்வைக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.