இந்திய கடற்படைக்கு சொந்தமான நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்து சமுத்திரத்தில் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு பணிகளின் ஒரு அங்கமாக ஐ.என்.எஸ் ஷல்கி எனப் பெயரிடப்பட்ட குறித்த நீர்மூழ்கிக் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் 64.4 மீற்றர் நீளம் கொண்டதுடன் மணிக்கு 22 கடல் மைல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. குறித்த நீர்மூழ்கிக் கப்பல் நாளை மறுதினம் இலங்கையிலிருந்து வெளியேறும் என கடற்படை அறிவித்துள்ளது.
இணைய விசா இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையைத் தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கும் அமைச்சரவை தீர்மானத்தை அமுலாக்க உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. தற்போதுள்ள இணைய விசா முறையை மாற்றி இலத்திரனியல் பயண அத்தாட்சிப்படுத்தும் நடவடிக்கையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. குறித்த அமைச்சரவை தீர்மானத்தை அமுல்படுத்தவே உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட இருவரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மட்டக்களப்பில் மணல் அகழ்வதற்காகப் புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்க பணியகத்தினால் வழங்கப்படும் அனுமதிப் பத்திரத்தை உரிய தரப்பினரிடம் வழங்குவதற்காக 15 இலட்சம் ரூபாவை கையூட்டலாகப் பெற முனைந்த போதே அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களையும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பில் தௌிவுபடுத்துவதற்காக அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் R.M.A.L.ரத்நாயக்க தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் சட்டம் தொடர்பில் அவர்களை மீண்டும் தௌிவுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.