நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் போக்குவரத்து கப்பல் எதிர்வரும் 15ஆம் திகதி உத்தியோகபூர்வமாக சேவையில் ஈடுபடவுள்ளது. இந்நிலையில் நாகப்பட்டினத்திலிருந்து சிவகங்கை பயணிகள் கப்பல் வெள்ளோட்டத்திற்காக இன்று யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. இன்றையதினம் 12 மணியளவில் குறித்த பயணிகள் போக்குவரத்து கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்துவைக்கப்பட்ட குறித்த கப்பல் சேவையானது பல்வேறு காரணங்களினால் இடை நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுடன் தொடர்புடைய சம்பவங்கள் தொடர்பில் இதுவரையில் 269 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 186 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்தில் 80 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் 266 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு ஒதுக்கப்படுள்ள தேர்தல் சின்னங்கள் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. வாக்காளர்களால் வேட்பாளர்களை அடையாளம் காண்பதற்கும் வாக்களிப்பு செயல்பாட்டை இலகுபடுத்துவதற்கும் இவ்வாறான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. அதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட சின்னங்கள் மற்றும் அங்கீகரிக்கப்படாத சின்னங்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியாகியுள்ளது.