ஜனாதிபதி தேர்தலில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள, தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் இன்று முற்பகல் வேளையில் செலுத்தப்பட்டது. சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான, தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினர் த.சிற்பரன், பொது வேட்பாளருக்கான கட்டுப்பணத்தை செலுத்தினார்.
12.08.2020இல் மட்டக்களப்பில் மரணித்த தோழர் உலகன் (வடிவேல் அன்பழகன் – அரசடி) அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்று..
12.08.2005இல் கொழும்பில் மரணித்த தோழர் சின்னத்துரை செல்வராஜா (ஓமந்தை), அன்னாரின் துணைவியாரான இலங்கை வானொலி, தொலைக்காட்சியின் சிரேஷ்ட அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா (கொக்குவில்) ஆகியோரின் 19ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று.
தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு முன்னெடுக்கப்படவிருந்த பயணிகள் கப்பல் சேவை மீண்டும் தாமதமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 16ஆம் திகதி முதல் நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு குறித்த பயணிகள் கப்பல் சேவை மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், குறித்த கப்பல் சேவையில் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையத்தளத்தில் கப்பல் சேவை காலவரையறை இன்றி தாமதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கு மற்றுமொரு அமைச்சு வழங்கப்பட்டுள்ளது. நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் இன்று காலை அவர் சத்தியப்பிரமாணம் செய்துக் கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. முன்னதாக குறித்த அமைச்சுப் பதவியை வகித்த விஜேதாச ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதால் அந்த பதவியிலிருந்து விலகியிருந்தார்.
உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் எனும் போர்வையில் வர்த்தக நிலையங்களில் பண மோசடிகள் இடம்பெறுவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. வருமானத்துறை அதிகாரிகள் எனும் போர்வையில் பணம் வசூலிக்க வருபவர்களிடம் பணம் கொடுக்க வேண்டாமென திணைக்களம் பொதுமக்களை அறுவுறுத்தியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட 2 அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தேசிய தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த கட்சிகளின் செயலாளர் பதவிகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடவே இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எக்சத் லங்கா மகா சபா கட்சி மற்றும் லங்கா மக்கள் கட்சி ஆகிய 2 கட்சிகளின் பிரதிநிதிகளையே அழைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று முதல் வரும் 19 ஆம் திகதி வரை எதிர்ப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது. சுயாதீனமான கிராம உத்தியோகத்தர் சேவை யாப்பு வர்த்தமானிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.