உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் எனும் போர்வையில் வர்த்தக நிலையங்களில் பண மோசடிகள் இடம்பெறுவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக உள்நாட்டு இறைவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. வருமானத்துறை அதிகாரிகள் எனும் போர்வையில் பணம் வசூலிக்க வருபவர்களிடம் பணம் கொடுக்க வேண்டாமென திணைக்களம் பொதுமக்களை அறுவுறுத்தியுள்ளது.

வருமானத்துறை அதிகாரிகளாக போலி வேடம் தரித்து வருகை தரும் நபர்களை கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அனைத்து வகையான வரிகள் தொடர்பான நிலுவைத் தொகைகள் உரிய முறையில் எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டு மாத்திரமே வசூலிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வரி செலுத்துவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் அது குறித்து அறிவிக்குமாறும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.