ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதைத் தடுத்து இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் இன்று அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி ஆர்.எஸ்.பீ.ரணசூரிய இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கிணங்க செயற்படாமை காரணமாக அரசியலமைப்பை மீறியுள்ளதாகவும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதற்கு அவர் தகுதியற்றவர் என உத்தரவிடுமாறும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் பிரகாரம் உயர் நீதிமன்றத்திற்கு நீதியரசர்களை நியமிக்காமையின் ஊடாக, அரசியலமைப்பு சட்டவிதிகளை ஜனாதிபதி மீறியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மாஅதிபர் ஒருவரையும் நியமிக்காது, அவர் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாக அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளின் மூலம் ஜனாதிபதி வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.