உலகத் தமிழர் பேரவை மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய அமைப்புகளை சட்டவிரோத அமைப்புகளாக தொடர்ந்து பேணும் கனடா அரசாங்கத்தின் தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் வரவேற்றுள்ளது. சமீபத்திய மீளாய்வின் படி விடுதலைப் புலிகளின் மீதமுள்ள உறுப்பினர்கள் சர்வதேச நிதி சேகரிப்பு மற்றும் கொள்முதல் வலையமைப்பைக் கொண்டிருப்பதாக கனடா கூறுகிறது. விடுதலைப் புலிகள் சார்பாக நிதி திரட்டுவதன் மூலம் உலகத் தமிழர் பேரவை தொடர்ந்தும் விடுதலைப் புலிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கனடா குறிப்பிடுகிறது.
2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் திகதி குற்றவியல் சட்டத்தின் கீழ் விடுதலைப் புலிகளை தீவிரவாத அமைப்பாக கனடா அரசாங்கம் முதன்முதலில் பட்டியலிட்டது. மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மறுபரிசீலனை செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
இதற்கான மதிப்பாய்வு செயல்முறை கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்தது. இதில் தடையை நீடிக்க மேற்கொள்ளப்பட்டத் தீர்மானத்தை வரவேற்பதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் விடுதலைப் புலிகள் மீதான தடை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.