இலங்கையின் நெடுந்தீவுஇ நயினாதீவு மற்றும் அனலைத்தீவு பகுதிகளில் ஹைபிரிட் எனப்படும் கலப்பு முறையில் முன்னெடுக்கப்படவுள்ள எரிசக்தி வேலைத்திட்டத்திற்கான முதலாவது கொடுப்பனவு இந்தியாவால் வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவினால் எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன மற்றும் இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகார சபையின் தலைவர் ரஞ்சித் சேபாலவிடம் குறித்த கொடுப்பனவு கையளிக்கப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் வடக்கு பகுதியில் உள்ள குறித்த 3 தீவுகளில் மின்சக்தி தேவையை நிவர்த்தி செய்யும் நோக்கில் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவும் இலங்கையும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன.

இதனையடுத்து குறித்த திட்டத்தை முன்னெடுப்பதற்காக இலங்கை நிலைபேறான வலுசக்தி அதிகார சபையினால் தனியார் நிறுவனத்துடன் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டது.

அதற்கமைய நெடுந்தீவு நயினாதீவு மற்றும் அனலைத்தீவு பகுதிகளில் முதற்கட்ட பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த திட்டத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்தின் ஆரம்பத்தில் நிறைவுறுத்த எதிர்பார்க்கப்படுகிறது.